Last Updated : 02 Dec, 2017 09:39 AM

 

Published : 02 Dec 2017 09:39 AM
Last Updated : 02 Dec 2017 09:39 AM

மீலாது நபியை முன்னிட்டு ஸ்ரீநகர் ஹசரத்பல் தர்காவில் புனித தலைமுடி காட்சிப்படுத்தப்பட்டது

உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களால், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான இன்று மீலாது நபி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஹசரத்பல் தர்காவில் நேற்று நபிகள் நாயகத்தின் புனித தலைமுடி காட்சிப்படுத்தப்பட்டது.

ஸ்ரீநகரின் ஹசரத்பல் தர்கா என்றழைக்கப்படும் ‘தர்கா-எ-ஹசரத்’ மிகவும் பிரபலமானது. இங்கு 18-ம் நூற்றாண்டிலிருந்து நபிகள் நாயகத்தின் புனித தலைமுடி பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதே இதற்கான காரணம் ஆகும். இதனுள் இருக்கும் நபிகள் நாயகத்தின் புனித தலைமுடியை ஒவ்வொரு ஆண்டும் மீலாது நபி மற்றும் முக்கிய திருநாட்களில் வெளியில் எடுத்து பொதுமக்கள் முன்னிலையில் காண்பிக்கப்படுவது வழக்கம்.

இந்தவகையில் நேற்று மீலாது நபி விழா தொடங்கியவுடன் மதியம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு காட்சிப்படுத்துதல் தொடங்கியது. இவ்வாறு அது தொடர்ந்து ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் செய்யப்பட்டது. இதை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கண்டு ஆனந்தப் பரவசமடைந்தனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஸ்ரீநகரின் மூத்த உருது பத்திரிகையாளரான ஜாவீத் நர்வாரி அசார் கூறும்போது, “நபிகள் நாயகத்தின் இந்த புனித தலைமுடிக்காக மசூதியுடன் சேர்த்து ஹசரத்பல் தர்கா அமைந்துள்ளது. மற்ற இடங்களில் உள்ளது போல் இதனுள் யாருடைய சமாதியும் கிடையாது. கடந்த டிசம்பர் 26, 1963-ல் ஒருமுறை திடீர் என புனித தலைமுடி காணாமல் போனது.

இதற்காக காஷ்மீரிகள் சாலைகளில் 9 நாள் தொடர் போராட்டம் நடத்தினர். இதன் பிறகு ஆட்சியிலும் மாற்றம் நிகழ்ந்து, காணாமல் போனது அதே இடத்தில் வைக்கப்பட்டது. இதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்தன. காஷ்மீரிகளை பொறுத்தவரை இந்த தர்கா மிகவும் நம்பிக்கைக்குரிய புனிதத் தலம்” என்றார்.

நபிகள் நாயகத்தின் வழித்தோன்றல்களில் ஒருவரான சையது அப்துல்லா, ஐதராபாத்துக்கு அருகிலுள்ள பிஜப்பூருக்கு 1635-ம் ஆண்டு குடிபெயர்ந்தார்.

அப்போது, அந்த புனித தலைமுடியை மெக்காவில் இருந்து தன்னுடன் கொண்டு வந்ததாகக் கருதப்படுகிறது. இங்கிருந்து அது காஜா நூரூத்தீன் எனும் காஷ்மீர் வியாபாரியிடம் சென்றது.

அவரிடம் இருந்து அதை மீட்ட முகலாயப் பேரரசரான அவுரங்கசீப், ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவிற்கு அனுப்பி வைத்தார். பிறகு தனது தவறை உணர்ந்து மீண்டும் காஷ்மீருக்கே அந்த புனித தலைமுடி அனுப்பப்பட்டு ஸ்ரீநகரில் வைக்கப்பட்டது.

இந்த தர்கா தற்போது காஷ்மீர் வக்பு வாரியத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x