Last Updated : 07 Dec, 2017 10:03 AM

 

Published : 07 Dec 2017 10:03 AM
Last Updated : 07 Dec 2017 10:03 AM

வானில் துப்பாக்கியால் சுட்டு மாப்பிள்ளை ஊர்வலம்: திருமணத்தை நிறுத்தினார் மணப்பெண்

வட மாநிலங்களில் இந்து மற்றும் முஸ்லிம் திருமண நிகழ்ச்சிகளில் வானத்தை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வழக்கம் முடிந்தபாடில்லை. இவ்வாறு சுடும்போது, தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து பலர் இறந்துள்ளனர். எனவே வட மாநில அரசுகள் இதற்கு தடை விதித்துள்ளன. என்றாலும் தடையை மீறி விழாக்களில் துப்பாக்கிகளால் சுட்டு மகிழ்வது தொடர்கிறது. இதை காரணம் காட்டி முதல்முறையாக மணப்பெண் ஒருவர் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

குவாலியர் நகரின் நிம்போஜி பகுதியில் வசிக்கும் கல்யாண் சிங் என்பவரின் மகள் பிங்கி. இவருக்கும் கோலே கா மந்திர் பகுதியை சேர்ந்த கிஷண் பரிஹார் என்பவருக்கும் கடந்த திங்கள்கிழமை இரவு திருமணம் நிச்சயம் ஆனது. இரவு 11.30 மணிக்கு மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாப்பிள்ளை வீட்டார், துப்பாக்கிகளால் வானத்தை நோக்கி சரமாரியாக குண்டுகளை பொழிந்தனர். இதைக்கேட்டு மணமேடையில் இருந்து தனது தந்தையுடன் வெளியே வந்த பிங்கி, அவ்வாறு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

ஆனால் மாப்பிள்ளை வீட்டார் இதை பொருட்படுத்தவில்லை. “இது சட்டவிரோதச் செயல், இதனால் யாருக்கேனும் உயிருக்கு ஆபத்து ஏற்படும்” என்று பிங்கி வற்புறுத்தியுள்ளார். இதற்கும் அவர்கள் செவிசாய்க்க மறுக்கவே, இந்த மாப்பிள்ளை தனக்கு வேண்டாம் என்று திருமணத்தை நிறுத்திவிட்டார் பிங்கி.

இதையடுத்து திருமண மண்டபத்தில் இரு தரப்பிலும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த குவாலியர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இரு தரப்பிலும் புகாரை பெற்று வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வானில் துப்பாக்கிச் சூடு நடத்த கள்ளத் துப்பாக்கிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதில் உயிரிழப்பு ஏற்பட்டாலும் எந்த திருமணமும் நின்றதாக தகவல் இல்லை. பல நேரங்களில், உரிமம் பெற்ற துப்பாக்கிகளால் சுடப்பட்டு இறந்ததாலும் அவை விபத்து என வழக்குகளை முடிக்கும் நிலையும் வட மாநிலங்களில் தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x