ராஜஸ்தான் உள்ளாட்சி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

ராஜஸ்தான் உள்ளாட்சி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி
Updated on
1 min read

ராஜஸ்தானில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில், காங்கிரஸுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது.

ராஜஸ்தானில் பாஜக தலைமையிலான ஆட்சியில் வசுந்தரா ராஜே முதல் அமைச்சராக இருந்து வருகிறார். இங்கு நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஊராட்சி தலைவர் பரிஷத்தின் 4 பதவிகளிலும் காங்கிரஸுக்கு வெற்றி கிடைத்துள்ளது. 27 பஞ்சாயத்து சமிதிகளில் 16 இடங்கள் காங்கிரஸ் கைவசம் வந்துள்ளன. 6 முனிசிபல் நகராட்சிகளையும் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.

இது குறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட் கூறும்போது, ‘கடந்த 4 வருட கால பாஜக ஆட்சியால் வைத்த நம்பிக்கை குலைக்கப்பட்டதை இந்த முடிவுகள் காட்டுகின்றன. பாஜகவிடம் இருந்து பல இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. இதன்மூலம், ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு ஏற்படும் முடிவு துவங்கி விட்டது.’ எனத் தெரிவித்தார்.

முதல்வர் வசுந்தரா மற்றும் அவரது மகனான மக்களவை பாஜக எம்பி துஷ்யந்த் சிங் ஆகியோரது தொகுதிகள் அமைந்துள்ள பாரான் மாவட்டத்திலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள இரு முனிசிபல் நகராட்சிகளையும் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் பறித்துள்ளது.

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை முடிவுகளில் பாஜக வெற்றி பெற்று இருந்தது. ராஜஸ்தான் உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜகவிற்கு பின்னடைவு எனக் கருதப்படுகிறது. இம்மாநிலத்திற்கு மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in