Published : 11 Dec 2017 10:38 AM
Last Updated : 11 Dec 2017 10:38 AM

மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்தவர்கள் 36% இந்தியரே: ஆய்வில் தகவல்

நாட்டில் உள்ள 36 சதவீத இந்தியர்கள் மட்டுமே மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

குரோம் டேட்டா அனலிட்டிக்ஸ் அன்ட் மீடியா (சிடிஏஎம்) என்ற தனியார் ஆய்வு நிறுவனம் 4 ஆயிரம் இந்தியர்களிடம் காப்பீடு தொடர்பாக நேர்காணல் செய்து ஆய்வு நடத்தியது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, புனே மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்ட இந்த நேர்காணலில் பங்கேற்றவர்களில் 51 சதவீதம் பேர் பெண்கள். இதன் விவரம் வருமாறு:

நேர்காணலில் பங்கேற்றவர்களில் 41 சதவீதம் பேர் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ளதாகவும் 37 சதவீதம் பேர் வாகன காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மருத்துவ காப்பீடு திட்டத்தில் 36 சதவீதம் பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். அதிலும் வரி சேமிப்புக்காகவே மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்ததாக 87 சதவீதம் பேர் தெரிவித்தனர்.

இதில் தனியாக மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருப்பவர்கள் வெறும் 31 சதவீதம் பேர்தான். மற்றவர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தின் மூலம் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, பெரும்பாலானவர்கள் ரூ.2 லட்சம் வரையில் மட்டும் காப்பீடு பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதய மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட மிக முக்கிய அறுவை சிகிச்சைக்கு இந்தக் காப்பீடு பொருந்தாது.

மேலும் மருத்துவ செலவுக்காக சொந்த பணத்தை செலவிடுவது இந்தியாவில் அதிகமாக உள்ளது. இங்கு 2014-ல் மருத்துவத்துக்காக செலவிடப்பட்ட மொத்த தொகையில் 89 சதவீதம் நோயாளிகளின் சொந்தப் பணம் ஆகும். ஆனால் சர்வதேச சராசரி செலவு வெறும் 18 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x