Published : 28 Dec 2017 08:35 PM
Last Updated : 28 Dec 2017 08:35 PM

உடனடி முத்தலாக்கை குற்றமாகக் கருதி 3 ஆண்டு சிறைத் தண்டன விதிக்க வகை செய்யும் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றம்

உடனடி முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. எனினும், மாநிலங்களவையில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இதை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முஸ்லிம் ஆண்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உடனடியாக மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்வது வழக்கமாக உள்ளது. இதை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்றுமாறும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதையடுத்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சகங்களுக்கு இடையிலான குழு, முத்தலாக் தடை மசோதாவை தயாரித்தது. இதுகுறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த மசோதாவில் உள்ள சில அம்சங்களுக்கு சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. முஸ்லிம் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா என பெயரிடப்பட்டுள்ள முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் அறிமுகம் செய்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

66 புகார்கள்

கூச்சலுக்கு நடுவே ரவிசங்கர் பிரசாத் பேசும்போது, “இது வரலாற்று சிறப்பு மிக்க நாள். இன்று நாங்கள் வரலாறு படைத்துள்ளோம். முத்தலாக் நடைமுறை சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, தங்களை முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததாக 66 பெண்கள் புகார் செய்துள்ளனர். காலையில் தூக்கத்திலிருந்து தாமதமாக எழுந்த காரணத்துக்காக கணவர் தன்னை விவாகரத்து செய்ததாக உத்தரபிரதேச மாநிலம், ராம்பூரைச் சேர்ந்த ஒரு பெண் இன்று புகார் செய்துள்ளார்.

எனவே, பெண்களுக்கு உரிய மரியாதை மற்றும் நீதி கிடைப்பதற்காகவே இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இது எந்த ஒரு மதத்துக்கும் எதிரானது அல்ல. முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை உரிமை இருக்கிறதா இல்லையா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்யும்” என்றார்.

சிறை தண்டனைக்கு எதிர்ப்பு

பின்னர் இந்த மசோதா உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, ஜேபிஎன் யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), அசாதுதீன் ஒவைசி (ஏஐஎம்ஐஎம்), பி.மஹதாப் (பிஜு ஜனதா தளம்), இ.டி.முகமது பஷீர் (அனைத்து இந்திய முஸ்லிம் லீக்) மற்றும் அன்வர் ராஜா (அதிமுக) உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக பேசினர். குறிப்பாக, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக இந்த மசோதா உள்ளதாகவும் இதில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். குறிப்பாக, சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்க வகை செய்யும் பிரிவை நீக்கக் கோரினர்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் தங்கள் இருக்கையில் இருந்தபடியே எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், இவர்கள் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்காததால் இந்த மசோதா மீது பேச அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், அங்கு தாக்கல் செய்யப்படும்போது இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது.

சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். திரிணமூல் காங்கிரஸ் இந்த மசோதாவுக்கு ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மக்களவையில் அக்கட்சி அமைதி காத்தது.

நீண்ட விவாதத்துக்குப் பிறகு எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு ஆதரவாக போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த மசோதா திருத்தம் எதுவும் இன்றி நிறைவேறியதாக மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். இதையடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த மசோதா சட்டமானால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை தவிர்த்து நாடு முழுவதும் செல்லுபடியாகும். இதன்படி வாய்வழியாகவோ, எழுத்து மூலமோ அல்லது இமெயில், எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் உள்ளிட்ட மின்னணு ஊடகம் மூலமோ உடனடியாக முத்தலாக் கூறுவது சட்டவிரோதம் ஆகும்.

இந்த சட்டத்தை மீறுவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும். மேலும் முத்தலாக் கூறும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்க இதில் வகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் கணவனிடம் தனக்கும் தனது குழந்தைக்கும் நிவாரணம் வழங்குமாறு கோர பெண்ணுக்கு உரிமை உள்ளது.

ஒருமித்த கருத்து

முன்னதாக, நேற்று காலையில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த மசோதாவின் அம்சங்கள் குறித்து சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எம்.பி.க்களுக்கு விளக்கம் அளித்தார்.

இந்த கூட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “முத்தலாக் தடை மசோதாவை ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நிறைவேற்ற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் வழங்கியதும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும். அங்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்திய பின்னர் இந்த மசோதா நிறைவேற்றப்படும். இது தொடர்பான முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன” என்றார்.

திருத்தம் வேண்டும்: காங்கிரஸ்

இந்த மசோதா குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறும்போது, “உடனடி முத்தலாக் நடைமுறையை தடை செய்ய வழி வகுக்கும் இந்த மசோதாவை ஆதரிக்கிறோம். ஆனால், முஸ்லிம் பெண்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் இந்த மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனை சிறையில் அடைத்தால் அந்தப் பெண்ணுக்கும் குழந்தைக்கும் நிவாரணம் எப்படி கிடைக்கும்? எனவே, பெண்களுக்கு நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x