Published : 24 Aug 2023 03:48 PM
Last Updated : 24 Aug 2023 03:48 PM

குற்றவியல் சட்டங்களுக்கு மாற்று - 3 மசோதாக்களை ஆய்வு செய்கிறது நாடாளுமன்றக் குழு

மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா

புதுடெல்லி: ஐபிசி, சிஆர்பிசி, ஐஇசி ஆகிய குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் 3 புதிய மசோதாக்கள் தொடர்பாக உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு இன்று (ஆக.24) ஆலோசனை மேற்கொண்டது.

நடந்து முடிந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்திய குற்றவியல் சட்டத்துக்கு (ஐபிசி) பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு (சிஆர்பிசி) பதிலாக பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023, இந்திய சாட்சிகள் சட்டத்துக்கு (ஐஇசி) பதிலாக பாரதிய சாக் ஷியா விதேயக் 2023 ஆகிய 3 புதிய மசோதாக்களை மக்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இந்திய குற்றவியல் சட்டங்களை குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் 3 புதிய மசோதாக்கள் தொடர்பாக உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு இன்று (ஆக.24) ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை குறுகிய கால அறிவிப்பில் நடத்தியதற்காக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இது ஒருபுறம் இருக்க,ஆலோசனைக் கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, மூன்று மசோதாக்கள் குறித்து விரிவாக எடுத்துரைப்பார் எனத் தெரிகிறது. ஏனெனில் உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவானது மூன்று மாதங்களில் இந்த மசோதாக்களை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது மசோதாக்களை மேம்படுத்தி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது அரசின் திட்டமாக இருப்பதாகத் தெரிகிறது. மேலும், பாஜக உறுப்பினர் பிரிஜ் லால் தான் உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மசோதா தாக்கலின்போது அமித் ஷா பேசியதாவது: முன்னதாக மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமித் ஷா, "கடந்த 1860-ம் ஆண்டில் இந்திய குற்றவியல் சட்டம், 1898-ம் ஆண்டில் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், 1872-ம் ஆண்டில் இந்திய சாட்சிகள் சட்டம் வரையறுக்கப்பட்டன. இவை ஆங்கிலேயர் கால சட்டங்கள். இவை ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டன. இவற்றால் நீதி நிலைநாட்டப்படவில்லை. தண்டனைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.

எனவே இந்த 3 சட்டங்களுக்கு பதிலாக, இந்தியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் 3 புதிய மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.தண்டனை வழங்குவதை குறிக்கோளாககொண்டு இவை வரையறுக்கப்படவில்லை. நீதியை நிலைநாட்டும் வகையிலேயே இந்த புதிய மசோதாக்களின் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 18 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள், உச்ச நீதிமன்றம், 22 உயர் நீதிமன்றங்கள், 5 சட்ட அமைப்புகள், 5 பல்கலைக்கழகங்கள், 142 எம்.பி.க்கள், 270 எம்எல்ஏக்கள், பொதுமக்கள் ஆகியோரின் பரிந்துரைகள், ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த புதிய மசோதாக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன" என்று பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது. | இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களை அறிய > உண்மையான அடையாளத்தை மறைத்து பாலியல் உறவில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை - 3 புதிய மசோதாக்களின் முக்கிய அம்சங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x