Published : 24 Aug 2023 09:55 AM
Last Updated : 24 Aug 2023 09:55 AM

புதிய விண்வெளி வர்த்தகத்தில் இஸ்ரோ!

சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றுள்ளதால், தெற்காசிய நாடுகளிடம் புதிய விண்வெளி தொழில் வளர்ச்சி அடையும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ரஷ்யா, நிலவுக்கு அனுப்பிய லூனா-25 திட்டமிட்டபடி தரையிறங்காமல் நொறுங்கி விழுந்தது. அதன்பின், சந்திரயான்-3 விண்கலத்தின் மீது உலக நாடுகளின் கவனம் சென்றது. இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலம் நேற்று மாலை வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் புதிய விண்வெளி தொழில் போட்டியில் இஸ்ரோவும் களமிறங்க வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன. நிலவில் இதுவரை யாரும் சென்றிராத ஒரு பகுதியில் இந்தியா விண்கலத்தை இறக்கி ஆராய்வதன் மூலம் திடீரென ஒரு போட்டி உருவாகி உள்ளது. இந்த சூழ்நிலை கடந்த 1960-ம் ஆண்டுகளில் நிலவில் யார் முதலில் கால் பதிப்பது என்று அமெரிக்காவும் அப்போதைய சோவியத் யூனியனும் மோதிக் கொண்ட சம்பவங்களை நினைத்துப் பார்க்க வைக்கிறது.

தற்போது நிலைமை அப்படி இல்லை. விண்வெளி என்பது வர்த்தகத்துக்கான களமாக மாறிவிட்டது. அதற்கு நிலவின் தென் பகுதியில் இந்தியா தரையிறங்கியது மிகப்பெரிய பரிசாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் அங்குதான் உறைநிலையில் தண்ணீர் இருக்கிறது. இதன் மூலம் அங்கு எதிர்காலத்தில் காலனி உருவாகும். அதன்மூலம் அங்குள்ள தாது பொருட்களை பூமிக்கு எடுத்து வரும் அளவுக்கு வர்த்தகம் ஏற்படும். அதற்கு சந்திரயான்-3ன் ஆராய்ச்சி மிகப் பெரிய அளவில் உதவும் என்கின்றனர். இது செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அடுத்தகட்டத்துக்கு செல்லவும் உதவும் என்கின்றனர்.

மேலும் விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் இந்தத் துறையில் அந்நிய முதலீடுகள் 5 மடங்கு அதிகரிக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் வர்த்தகத்தில் இஸ்ரோவின் பங்கு உலகளவில் பெரும்பங்கு வகிக்கும் என்றும் கணிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x