

இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை விக்ரம் சாராபாய். இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முதல் தலைவராக(1963 – 1971) பதவி வகித்தார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும் பதவி வகித்தார். இந்நிலையில், விக்ரம் சாராபாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில், சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டருக்கு விக்ரம் என பெயரிடப்பட்டது. இந்நிலையில் இந்த விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
இதுகுறித்து விக்ரம் சாராபாயின் மகன் கார்த்திகேய சாராபாய் நேற்று கூறும்போது, “இந்தியா மட்டுமல்ல இந்த உலகத்துக்கே இன்று மிகச் சிறப்பான நாள். ஏனெனில், இதுவரை யாருமே செல்லாத நிலவின் தென் துருவத்தில் நாம் காலடி வைத்துள்ளோம்.
சந்திரயான் லேண்டருக்கு விக்ரம் என பெயர் வைத்தது எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையாக உள்ளது. இந்த லேண்டர் பல்வேறு பொருட்களால் பல்வேறு தரப்பட்ட மக்களால் தயாரிக்கப்பட்டது. இந்தியாவை இது ஒருங்கிணைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் இதில் பங்காற்றி உள்ளனர். இது புதிய இந்தியாவை பிரதிபலிக்கிறது” என்றார்.
விக்ரம் சாராபாய் மகளும் சமூக ஆர்வலருமான மல்லிகா சாராபாய் கூறும்போது, “ஒட்டுமொத்த மனித குலத்துக்குமான அடுத்த அடிதான் சந்திரயான் திட்டம். அறிவியலிலும் முயற்சியிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் கடினமாக உழைத்துள்ளார்கள் என நம்புகிறேன். இதன் மூலம் என்னுடைய தந்தையின் கனவுகளில் ஒன்று நிறைவேறி உள்ளது. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மற்ற நாடுகளுடனான போட்டியாக மட்டுமே இருக்கக் கூடாது என்றும் அது மனிதகுலத்துக்கு பயன்பட வேண்டும் என்றும் என் தந்தை கனவு கண்டார். அது நிறைவேறி வருகிறது” என்றார்.