

அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் தலைநகர் அய்ஸ்வாலில் இருந்து 21 கி.மீ. தொலைவில் சாய்ராங் அருகே குறுங் ஆற்றின் மீது புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது. வடகிழக்கு பிராந்தியத்தில் மாநிலத் தலைநகரங்களை ரயில் பாதை மூலம் இணைக்கும் திட்டத்தின் கீழ் இந்தப் பாலம் கட்டப்படுகிறது.
இங்கு சுமார் 40 தொழிலாளர்கள் நேற்று பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காலை 10 மணியளவில் உயரமான தூண்களுக்கு இடையே அமைக்கப்பட்டிருந்த இரும்பு கர்டர்களில் ஒன்று இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் அங்கு விரைந்தனர். அருகில் வசிக்கும் கிராம மக்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில் இதுவரை 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிலரை காணவில்லை என்பதால் அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்துள்ளனர். விபத்து குறித்து பிரதமர் மோடி மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு அறிவித்துள்ளார்.
விபத்து குறித்து மிசோரம் ஆளுநர் ஹரி பாபு, முதல்வர் ஜோரம் தங்கா ஆகியோரிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார். அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.