Published : 09 Dec 2017 02:46 PM
Last Updated : 09 Dec 2017 02:46 PM

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு: தேர்தல் ஆணையத்திற்கு ஒமர் அப்துல்லா கேள்வி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு புகார் குறித்து தனக்கு வலுவான சந்தேகம் இருப்பதாகவும், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்கும் என நம்புவதாகவும் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்தத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தலில் 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 2.12 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். முதல் கட்டத் தேர்தலில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி (ராஜ்கோட் தொகுதி), காங்கிரஸ் வேட்பாளர்கள் ஷக்திசிங் கோஹில் (மான்டவி தொகுதி), பரேஷ் தனானி (அம்ரேலி தொகுதி) ஆகியோர் முக்கியமானவர்கள்.

காலையில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு சற்று தாமதமாக தொடங்கியது. இந்நிலையில், போர்பந்தர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அர்ஜூன் மோத்வாடியா ஒரு பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

வாக்களித்துவிட்டு வெளியே வந்த அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ப்ளூடூத் வழியாக இணைக்கப்பட்டிருப்பதாகவும், இதனை படம்பிடித்து ஆதாரமாக வைத்திருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு தொடர்பாக எனக்கு வலுவான சந்தேகம் உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்து எனக்கு கேள்வி உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான எனது சந்தேகத்திற்கு தேர்தல் ஆணையம் உரிய பதில் அளிக்கும் என்ற நம்புகிறேன்‘‘ எனக் கூறியுள்ளார்.

இதுபோலவே குஜராத் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலும் இதுதாடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் ‘‘பல்வேவறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தவறான முறையில் செயல்படுவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இதுபற்றி தேர்தல் ஆணையம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அதில் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x