இன்று நிலவில் தரையிறங்கும் சந்திரயான்-3: உ.பி. அரசு பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

லக்னோ: சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் இன்று மாலை தரையிறங்குவதை அனைத்து அரசு பள்ளிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ கடந்த மாதம் 14-ம் தேதி அனுப்பியது. புவி சுற்றுவட்ட பாதைகள், நிலவின் சுற்றுவட்ட பாதைகளை கடந்து சந்திராயன்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணிக்கு தரையிறங்குகிறது. இதற்கான பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியை இஸ்ரோ தனது வெப்சைட், யூட்யூப் சேனல் மற்றும் தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்நிகழ்ச்சி அனைத்து அரசு பள்ளிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதற்காக உ.பி அரசு பள்ளிகள் இன்று மாலை 5.15 மணி முதல் 6.15 மணி வரை திறந்து வைக்குமாறு அரசு பள்ளிகளுக்கு உ.பி கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து உ.பி அரசின் கூடுதல் திட்ட இயக்குனர் மதுசூதன் ஹல்ஜி கூறுகையில், ‘‘வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை மாணவர்கள் காண்பதற்காக அரசு பள்ளிகளை மாலையில் ஒரு மணி நேரம் திறந்திருக்க முடிவு செய்துள்ளது இதுவே முதல் முறை. சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்குவது மிக முக்கியமான தருணம். இது மாணவர்களின் ஆர்வத்தை தூண்டுவதோடு மட்டும் அல்லாமல், ஆராய்ச்சி பற்றிய உணர்வையும் தூண்டும். அதனால் இந்நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அரசு பள்ளி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in