

ஹைதராபாத்: மோட்டார் பைக் மோதி பெட்ரோல் டேங்க் தீப்பற்றியதில் பேருந்து ஒன்று முற்றிலும் எரிந்து நாசமானது.
தெலங்கானா மாநிலம், சித்திப்பேட்டை மாவட்டம், வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (26). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை சுமார் 6 மணியளவில் பணி நிமித்தமாக அலுவலகத்திற்கு மோட்டார் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கொலத்தூரு எனும் இடத்தில் தனியார் மருந்து நிறுவனத்தின் பேருந்து ஒன்று சம்பத் மீது மோதியது. இதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பத்தின் பைக், பேருந்துக்கு அடியில் சென்றதில் பெட்ரோல் டேங்க் உடைந்து தீப்பற்றியது. இந்த தீ பேருந்திலும் மளமளவென பரவியது.
இதையடுத்து பேருந்திலிருந்த மருந்து நிறுவன ஊழியர்கள் துரிதமாக கீழே இறங்கிவிட்டதால் உயிர் தப்பினர்.
தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர்.
அதற்குள் பேருந்து முற்றிலு மாக தீக்கிரை யானது. விபத்து குறித்து ஷமீர்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.