Published : 15 Dec 2017 12:31 PM
Last Updated : 15 Dec 2017 12:31 PM

ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக குரல்

ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டதொடர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தொடங்கியது. மாநிலங்களவை தொடங்கியதும், குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடு,  ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் சாதனைக்கு பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் அவர், "எம்.பி.க்கள் மசோதா மற்றும் கோரிக்கை விடுக்கும்போது, ‘தயவு செய்து, அருள் கூர்ந்து’ என வார்த்தைகளை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து மறைந்த எம்.பிக்களுக்கு அவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாநிலங்களவை வழக்கமான அலுவல் தொடங்கியது.

அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தை உலுக்கியுள்ள ஒக்கி புயல் பாதிப்பு குறித்து, அதிமுக எம்.பி,க்கள் எழுப்பினர். அப்போது பேசிய அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் "கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை ஏற்று ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மத்திய அரசு உடனடியாக தமிழகத்துக்கு தேவையான நிதியுதவியை வழங்க வேண்டும்’’ எனக் கூறினார்.

அப்போது வெவ்வேறு பிரச்சினைகளை எழுப்பி மற்ற எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவரது உரையில் குறுக்கீடு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x