

மகதாயி நதி நீர் பங்கீட்டு பிரச்சினையில் பிரதமர் தலையிட கோரி வட கர்நாடகாவில் விவசாயிகள் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதற்கு ஆதரவாக பாஜக, மஜத ஆகிய அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்ததால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான மகதாயி நதிநீர் பங்கீடு விவகாரம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இதுகுறித்து மகதாயி நடுவர் மன்றம் வருகிற பிப்ரவரி முதல் இறுதி விசாரணை நடத்த உள்ளது. கடந்த அக்டோபரில் கர்நாடக அரசு வட கர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்காக 7.56 டிஎம்சி வழங்குமாறு தாக்கல் செய்த இடைக்கால மனுவை நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு மகதாயி நீர் வழங்கக் கோரி கடிதம் எழுதினார். ஆனால் கோவா அரசு தரப்பில் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. இதனிடையே கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை சந்தித்த கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா,விரைவில் மகதாயி நீரை பெற்றுத்தருவதாக உறுதி அளித்தார். ஆனால் நீரை பெற்றுத்தராததால், காங்கிரஸூக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் வடகர்நாடகாவை சேர்ந்த விவசாயிகள் கோவா அரசை கண்டித்தும், பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவை கண்டித்தும் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மகதாயி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி கதக், பெல்காம், பாகல்கோட்டை, தார்வாட், ஹாவேரி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வடகர்நாடக மாவட்டங்களில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்லாமல் வங்கிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டன. கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும் முற்றிலுமாக அடைக்கப்பட்டன. தார்வாட், ஹூப்ளி, பாகல் கோட்டை ஆகிய பகுதிகளில் மகதாயி விவசாய சங்கத்தினர் சார்பாக நடத்திய பேரணியில் சாலையில் டயர் கொளுத்தியதால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
ஹூப்ளியில் பாஜகவினரும், மஜதவினரும் போட்டிப்போட்டு போராட்டம் நடத்தியதால் இரு தரப்பினரிடமும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே ஹூப்ளி ரயில் நிலையத்தில் நுழைந்த கர்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பினர் திடீரென ரயில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களைத் தடுத்த போலீஸார் 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். கதக்கில் போராட்டக்காரர்கள் அரசு பேருந்தின் மீது கல்வீசியதில் பயணிகள் 3 பேர் காயமடைந்தனர்.
வடகர்நாடகாவில் நடந்த போராட்டங்களின்போது பிரதமர் மோடி, பாஜக மாநிலத்தலைவர் எடியூரப்பா, முதல்வர் சித்தராமையா ஆகியோருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வட கர்நாடக மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்தால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. விவசாயிகளின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து 5 மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பெங்களூருவில் பாஜக போராட்டம்
பெங்களூருவில் பாஜகவினர் கர்நாடக அரசை கண்டித்து காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முன்னாள் பாஜக அமைச்சர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஷோபா கரந்தலாஜே, அசோக் ஆகியோர் தலைமையில் நடந்த போராட்டத்தில் நூற்று கணக்கான பாஜகவினர் பங்கேற்றனர். காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஷோபா கரந்தலாஜே பாஜக தொண்டர்களுடன் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அசோக் உள்ளிட்ட பாஜகவினர் முதல்வர் சித்தராமையாவை கடுமையாக விமர்சித்து பேசியதால், போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மர்ம நபர்கள் சிலர் கல்வீசியதில் பாஜக முன்னாள் அமைச்சர் அசோக்கின் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அசோக், ஷோபா கரந்தலாஜே உள்ளிட்ட பாஜகவினரை கைது செய்தனர்.
மகதாயி விவகாரத்தில் மீண்டும் வெடித்துள்ள விவசாயிகளின் போராட்டத்துக்கு கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட திரைப்பட வர்த்தக அமைப்பு, வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் மேலும் வலுக்கும் என தெரிகிறது.