

புதுடெல்லி: நடிகர் ரஜினி தனது ‘ஜெயிலர்’ படம் வெளியான பிறகு இமயமலைக்கு சென்றார். இப்பயணத்தை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலம் வந்த அவர், அதன் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை உ.பி. வந்தார்.ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார்.
துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுடன் ‘ஜெயிலர்’ சிறப்புக் காட்சியை பார்த்தார். மறுநாள், உ.பி. எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் சிங் யாதவை சந்தித்த அவர், அயோத்திக்கும் சென்று வந்தார். இந்நிலையில் ரஜினி நேற்று திடீரென உ.பி.யின் சர்ச்சைக்குரிய அரசியல்வாதி ராஜா பைய்யா எனும் ரகுராஜ் பிரதாப் சிங்கை (53) சந்தித்தார். இவர் சுயேச்சையாக இருந்தாலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சராகி விடுவார். லக்னோவில் ராஜா பைய்யா வீட்டில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது ரஜினிக்கு காசி விஸ்வநாதர் கோயில் விபூதி, கங்கை தீர்த்தம் கொண்ட கலசம் உள்ளிட்ட புனிதப் பொருட்களை ராஜா பைய்யா வழங்கினார். அவருடன் சிறிது நேரம் உரையாடினார் ரஜினி.
இதனிடையே ராஜா பைய்யாவுடன் ரஜினியின் திடீர் சந்திப்பை எவரும் எதிர்பார்க்கவில்லை. இதனால், இதன் பின்னணியையும் ஊடகங்களால் கணிக்க முடியவில்லை.
இதுகுறித்து ரஜினியுடனான படத்துடன் ராஜா பைய்யா பதிவிட்ட ட்விட்டில், “சூப்பர் ஸ்டாருடனான இந்த சந்திப்பை, எனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகக் கருதி அவரை வரவேற்கிறேன். இந்நாட்டின் திரையுலகில் மட்டுமின்றி, ஆன்மிக உலகம் மற்றும் பக்தியிலும் அவர் ஒரு சூப்பர் நாயகர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ அதிகாரிகள்: ரஜினிகாந்த் நேற்று லக்னோவில் இந்திய ராணுவத்தின் மத்திய படைப் பிரிவின் தலைமை அலுவலகத்திற்கும் சென்றிருந்தார். இங்கு ரஜினி தனது நண்பரும் தலைமை அதிகாரியுமான லெப்டினன்ட் ஜெனரல் பி.ராஜா சுப்பிரமணியை சந்தித்தார். அங்குள்ள ராணுவ அதிகாரிகள் இடையே அவர் உரை நிகழ்த்தினார். பிறகு அங்குள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் குடும்பத்தினர் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தனது அனுபவத்தை ராணுவ அலுவலக பதிவேட்டில் ரஜினி பதிவு செய்தார்.