Last Updated : 22 Jul, 2014 03:09 PM

 

Published : 22 Jul 2014 03:09 PM
Last Updated : 22 Jul 2014 03:09 PM

நீதித்துறை ஊழல் விவகாரம்: நீதிபதி மார்கண்டேய கட்ஜு எழுப்பும் 6 கேள்விகள்

நீதித்துறை ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, நீதிபதி லஹோத்திக்கு 6 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவரும் பிரஸ் கவுன்சில் தலைவராகவும் உள்ள நீதிபதி மார்கண்டேய கட்ஜு நீதித்துறை ஊழல் குறித்த வெளியிட்ட புகாரை முன்னாள் தலைமை நீதிபதிகள் ஆர்.சி.லஹோதி, கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர் மறுத்துள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் நீதிபதி ஆர்.சி.லஹோதிக்கு 6 கேள்விகளை கட்ஜு முன்வைத்துள்ளார். தனது வலைப்பதிவுத் தளத்தில் கட்ஜு லஹோத்திக்கான 6 கேள்விகளையும் கட்ஜு பதிவேற்றியுள்ளார்.

கேள்வி 1:

நான் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது, அங்கிருந்த கூடுதல் நீதிபதி ஊழலில் ஈடுபடுவதாக உங்களுக்கு (லஹோத்தி) கடிதம் எழுதினேனா இல்லையா? அதில், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ரகசிய விசாரணை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தேனா இல்லையா? மேலும் இதுதொடர்பாக டெல்லி வந்து தங்களை நேரில் சந்தித்து ஆலோசித்ததோடு புலன் விசாரணைக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தினேனா இல்லையா?

கேள்வி 2:

எனது கோரிக்கையை ஏற்று நீதிபதி லஹோத்தி ஊழல் குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி மீது விசாரணைக்கு உத்தரவிட்டது உண்மையா இல்லையா?

கேள்வி 3:

டெல்லி சந்திப்புக்கு சில வாரங்களுக்குப் பின்னர் நான் சென்னை திரும்பிட்யிருந்தபோது என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி ஊழலில் ஈடுபட்டத்தை புலன் விசாரணை உறுதி செய்துள்ளது என லஹோத்தி என்னிடம் தெரிவித்தாரா இல்லையா?

கேள்வி 4:

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி குறித்த புலன்விசாரணை அறிக்கையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அந்த அறிக்கை கிடைக்கெப்பற்ற பின்னர் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த லஹோதி, நீதிபதிகள் சபர்வால், ருமா பால் அடங்கிய மூன்று நீதிபதிகள் அடங்கிய காலெஜியத்தை கூட்டி இது தொடர்பாக ஆலோசனை நடத்தினாரா, இல்லையா?

கேள்வி 5:

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி பதவி நீட்டிப்பு தொடர்பான பரிந்துரையை மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற காலெஜ்ஜியம் மத்திய அரசுக்கு அனுப்பிவைத்த பின்னர், லஹோதி, மற்ற இருவருக்கும் தெரியாமல் தனிப்பட்ட முறையில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாரா இல்லையா? அந்தக் கடிதத்தில், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிக்கு மேலும் ஓராண்டு பதவிக்காலத்தை நீட்டிக்குமாறு அரசுக்கு பரிந்துரைத்தாரா இல்லையா?

கேள்வி 6:

புலன் விசாரணையில், சம்பந்தப்பட்ட அந்த நீதிபதி ஊழல் கறை படிந்தவர் என தெரிவிக்கப்பட்டிருந்தும் நீதிபதி லஹோதி அவருக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு அளிக்க மத்திய அரசிடம் பரிந்துரைத்தது ஏன்?

காலதாமதம் ஏன்?

கட்ஜு எழுப்பிய குற்றச்சாட்டு நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்த நிலையில், அவர் ஏன் இவ்வளவு காலத்திற்குப்பின்னர் இந்த சர்ச்சையை கிளப்ப வேண்டும் என கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கும் கட்ஜு தனது வலைப்பதிவு பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில், "சிலர் நான் ஏன் இவ்விவகாரத்தை இவ்வளவு கால தாமதாக எழுப்பியுள்ளேன் என கேட்கின்றனர். எனது பேஸ்புக் பதிவில் நான் நிறைய தகவல்களை பகிர்ந்துகொள்வதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் எனது அனுபவங்கள் தொடர்பாகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என தமிழர்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர். அதனாலேயே இதை இப்போது பகிர்ந்து கொண்டிருக்கிறேன்" என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x