

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் அளித்த வாய்மொழி வாக்குமூலங்களை ஆதாரங்களாக கருதக்கூடாது என சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தனது இறுதி வாதத்தின்போது தெரிவித்தார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் 2-வது குற்றவாளியாக குற்றம்சாட்டப் பட்டுள்ள சசிகலா தரப்பில் அவரது வழக்கறிஞர் மணிசங்கர் தனது இறுதிவாதத்தை 2-வது நாளாக முன்வைத்தார். அவர் கூறியதாவது: “சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிகலா,சுதாகரன்,இளவரசி ஆகிய மூவரும் வழக்கு காலத் துக்கு முன்பிருந்தே பல்வேறு தனியார் நிறுவனங்களை நடத்தி வந்தனர்.
அதனை அவர்கள் ஜெயலலிதாவின் பணத்திலோ அல்லது அவரது நேரடியான பங்கேற்பின் மூலமாகவோ நடத்தினார்கள் என கூறுவதை ஏற்கமுடியாது. ஏனென்றால் நாங்கள் குறுக்கு விசாரணை செய்த 99 அரசு தரப்பு சாட்சி களில் எவரும் ஜெயலலிதா தனியார் நிறுவனங்களின் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டார் என தெரிவிக்கவில்லை.
வாக்குமூலம் ஆதாரமில்லை
மேலும் சசிகலா நடத்திய தனியார் நிறுவனங்களுக்கு நிலம் வாங்கியது தொடர்பான புகாரில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஒரு குறிப்பிட்ட தொகையை காசோலையாகவும் மீதி தொகையை ரொக்கமாகவும் கொடுத்துள்ளார் என ரூ. 80 லட்சத்துக்கு கணக்கு காட்டியுள்ளனர். ஆனால் சசிகலா ரொக்கமாக பணம் கொடுத்தார் என்பதற்கு எவ்விதமான ஆதாரத் தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. சம்பந்தப் பட்ட சாட்சிகள் வாய்மொழியாக கொடுத்த வாக்குமூலத்தை ஆதாரமாக கருதமுடியாது.
அதேபோல லெக்ஸ் பிராப் பர்ட்டீஸ் நிறுவனத்துக்காக ராமாயி அம்மாள் என்பவரிடம் சசிகலா ரூ. 76 லட்சத்தை ரொக்கமாக கொடுத்து நிலம் வாங்கியதாக விசாரணை அதிகாரிகள் குற்றப்பத்திரிக் கையில் கூறியுள்ளனர். அதற்கு எந்த ஆவணத்தையும் ஆதார மாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. சில இடங்களில் தனியார் நிறுவனங்களுக்கு நிலம் வாங்கியதற்காக சசிகலா மிக குறைவான தொகைக்கு காசோலையும் மீதித் தொகைக்கு ரொக்கப்பணமும் செலுத்தி கிரயம் செய்துள்ளார் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. கிரய பத்திரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு காசோலையாக வழங்கப்படுகிறது என்றோ அல்லது ரொக்கமாக வழங்கப்படுகின்றது என்றோ குறிப்பிடப்பட்டிருக்கும். அவ்வாறு குறிப்பிடப்படாதவைகளை ஆதார மாக ஏற்கமுடியாது என 2007-ல் ராம் பண்டாரி கட்டிட நிறுவனம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு தரப்பில் சசிகலா மீது கூறப்படும் பணப் பரிவர்த்தனை விவகாரங்களுக்கு ஆதாரமாக அவர்கள் எவ்வித ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை.
மதிப்பீட்டில் குளறுபடி
இதேபோல சசிகலா தொடர்புடைய தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடத்தை மதிப்பீடு செய்த அரசு பொறியியலாளர்கள் ரவிராஜன், திருத்துவ ராஜ் ஆகியோர் அளித்துள்ள வாக்குமூலத்தில் மதிப்பீட்டு தொகையை தாங்கள் மிகையாக தெரிவித்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் மதிப்பீடு செய்த 6 மாதங்களுக்கு பிறகே அதன் மதிப்பு எவ்வளவு என்பதனை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.
சொத்துமதிப்பை மிகைப்படுத்த வேண்டும் என்பதற்காக காலம் தாழ்த்தி தாக்கல் செய்யப்படும் மதிப்பீட்டு அறிக்கை உண்மையாக இருக்க வாய்ப்பு மிக மிக குறைவு. அதேபோல பல கட்டிடங்களின் மதிப்புகள் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது'' என்று கூறி தனது இறுதிவாதத்தை முடித்தார். வழக்கின் அடுத்தகட்ட வாதம் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.