

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்குவது தொடர்பான விவகாரத்தில் அனைவரது கருத்துகளையும் கேட்டறியும் வகையில் கர்நாடக அரசு வரும் 23-ல் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
இரு மாநிலங்களுக்கிடையிலான காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம், மகதாயி நதி நீர் பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளோம். இந்த கூட்டம் வரும் புதன்கிழமை முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெறவுள்ளது. சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. நதி நீர் பிரச்சினை தொடர்பாக பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளன.
கர்நாடக விவசாயிகள் துயரத்தில் உள்ளதால், அவர்களை பாதுகாப்பதும், மாநிலத்தை பாதுகாப்பதும் நமது கடமை. மழைப்பொழிவு போதுமான அளவில் இல்லை. இவ்வாறு சிவக்குமார் கூறினார்.
தமிழகத்துக்கு காவிரி நதி நீர் வழங்குவது தொடர்பாக எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாஜகவின் வற்புறுத்தலுக்கு மத்தியில் கர்நாடக அரசு இந்த அனைத்துகட்சி கூட்டத்தை நடத்தவுள்ளது.
கடந்த வாரம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுமாறு முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.