

நிதி மோசடி வழக்கில், சாம்சங் நிறுவனத் தலைவர் லீ குன் ஹீ சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஜெசிஈ கன்சல்டன்சி நிறுவனம், சாம்சங் நிறுவனத் தலைவர் லீ குன் ஹீ மீது தொடர்ந்த பண மோசடி வழக்கில், நேரில் ஆஜராகாததால், அவருக்கு காசியாபாத் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.
இதனை எதிர்த்து லீ குன் ஹீ தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சி.கே.பிரசாத், பி.சி.கோஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் அளித்த உத்தரவில், "1.4 மில்லியன் டாலர் மதிப்பிலான பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் சாம்சங் நிறுவன தலைவருக்கு பிறப்பிக்கப்பட்ட கைது வாரன்டை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் 6 வார காலம் தடை விதிக்கிறது.
அந்த 6 வார காலத்தில், காசியாபாத் நீதிமன்றத்தில் லீ குன் ஹீ ஆஜராகி ஜாமீனோ அல்லது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கோ பெற்றுக் கொள்ளலாம்" என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக சாம்சங் நிறுவன தலைவர் லீ குன் ஹீ மீது தென் கொரிய அரசு நிதி முறைகேடு மற்றும் வரி எய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவர் தனது பதவியிலிருந்து விலகினார். பின்னர், தென் கொரிய அரசு வழங்கிய மன்னிப்பை அடுத்து, அவர் தனது பதவியில் தொடர்ந்து நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.