

உத்தரகாசி: உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள் ஆகியுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
கங்கோத்திரி தேசிய நெடுஞ்சாலையில் கங்நானி எனும் பகுதிக்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய பேருந்து கங்கோத்திரியில் இருந்து உத்தரகாசி நோக்கி வந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். இந்த பேருந்தில் குஜராத் மாநிலத்தில் இருந்து வந்திருந்த பயணிகள் பயணித்ததாக தகவல். சுமார் 50 மீட்டர் ஆழத்தில் பேருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையாக சிகிச்சை வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி. அதோடு கள சூழலை கண்காணிக்குமாறு உத்தரகாசி மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் பிரேம்சந்த் அகர்வாலை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குஜராத் முதல்வர் இரங்கல்: “உத்தராகண்ட் மாநிலத்துக்கு யாத்திரை சென்ற குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியதை அறிந்து வருந்துகிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணம் பெற பிரார்த்திக்கிறேன்” என குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.