

பெங்களூரு: ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நாட்டின் வெவ்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதன்படி, டிஜிட்டல் பொருளாதார துறைஅமைச்சர்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.
இதில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: பெங்களூரு மாநகரில் கூடியுள்ள உங்கள் அனைவருக்கும் வணக்கம். டிஜிட்டல் பொருளாதாரம் குறித்து விவாதிப்பதற்கு இதைவிட சிறந்த இடம் வேறு இருக்க முடியாது. இந்தியாவில் டிஜிட்டல் இந்தியா திட்டம் கடந்த 2015-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த 9 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந் துள்ளது. இது புதுமையின் மீதான நமது அசைக்க முடியாத நம்பிக்கையால் இயக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள 85 கோடி இணையதள பயன்பாட்டாளர்கள் உலகிலேயே மிகக் குறைந்த செலவில் டேட்டா சேவையை அனுபவிக்கின்றனர். டிஜிட்டில் இந்தியா திட்டத்தால் அரசு நிர்வாகம் சுலபமானதாகவும், வெளிப்படையானதாகவும் மாறி உள்ளது.
1000 கோடி பரிவர்த்தனை: ஜன் தன், ஆதார், செல்போன் (ஜேஏஎம்) ஆகிய 3 முக்கிய திட்டங்களும் அனைவரையும் உள்ளடக்கிய நிதி சேவையில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பணப்பரிமாற்றத்தை எளிமைப்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட யுபிஐ முறை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மாதந்தோறும் யுபிஐ மூலம் 1000 கோடி பரிவர்த்தனை நடைபெறுகிறது.
பன்முகத்தன்மை கொண்ட நாடான இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. இது உலகில் உள்ள அனைத்து மதங்களுக்கும் எண்ணற்ற கலாச்சார நடைமுறைகளுக்கும் தாயகமாக உள்ளது. இத்தகைய பன்முகத்தன்மையுடன் தீர்வுகளுக்கான ஆய்வகமாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் வெற்றி பெறும் தீர்வை உலகின் எந்த ஒரு நாட்டுக்கும் சுலபமாக பயன்படுத்த முடியும்.
சர்வதேச சவால்களுக்கு பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தீர்வை இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வழங்குகிறது. இந்தியா தனது அனுபவத்தை உலக நாடுகளுக்கு வழங்க தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
56% பெண்கள்: அனைவருக்கும் வங்கி சேவை வழங்கும் நோக்கத்துடன் கடந்த2014-ம் ஆண்டு ஆக்ஸ்ட் 28-ம் தேதி பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இந்த கணக்குக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை.
இந்நிலையில், ஜன் தன் வங்கிக் கணக்குகள் எண்ணிக்கை 50 கோடியை தாண்டி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று முன்தினம் அறிவித்தது.
இதுகுறித்து பிரதமர் மோடி நேற்று எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், “ஜன் தன் வங்கிக் கணக்கு திட்டத்தில் 50 கோடியைதாண்டி புதிய மைல்கல்லை எட்டி உள்ளோம். கணக்கு வைத்திருப்போரில் பாதிக்கும் மேற்பட்டோர் (56%) பெண்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.இதில் 67% வங்கிக் கணக்குகள் ஊரகப் பகுதிகளில் தொடங்கப்பட் டுள்ளன.
இதன்மூலம் ஏழைகளுக்கான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.