

லே: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லடாக்கில் உள்ள பான்காங் ஏரி பகுதிக்கு நேற்று மோட்டார் சைக்கிளில் சென்றார்.
லடாக்கில் அமைந்துள்ள அழகிய பான்காங் ஏரி கடல் மட்டத்தில் இருந்து 13,862 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் 50 சதவீத பகுதி சீன எல்லையிலும் 40 சதவீத பகுதி இந்திய பகுதியிலும் உள்ளன. பத்து சதவீத பகுதி சர்ச்சைக்குரிய இடமாக நீடிக்கிறது.
கடந்த 17-ம் தேதி லடாக் யூனியன் பிரதேச தலைநகர் லே பகுதிக்கு ராகுல் காந்தி இரு நாட்கள் பயணமாக சென்றார். லடாக்கின் பான்காங் ஏரிக்கு அவர் செல்ல விரும்பியதால் அவரது லடாக் பயணம் 6 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்த சூழலில் நேற்று ராகுல் காந்தி லே நகரில் இருந்து மோட்டார் சைக்கிளில் பான்காங் ஏரி பகுதிக்கு சென்றார். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் 1 0புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பான்காங் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறேன். உலகின் மிக அழகிய பகுதிகளில் இந்த ஏரியும் ஒன்று என எனது தந்தை ராஜீவ் காந்தி கூறியிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார். பான்காங் ஏரி பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் ராகுல் நேற்றிரவு தங்கினார்.
காய்கனி வியாபாரிக்கு விருந்து: தலைநகர் டெல்லியின் அசத்பூர் சந்தையில் ராமேஸ்வர் என்பவர் தள்ளுவண்டியில் காய்கனி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் தனியார் தொலைக்காட்சி நிருபர் அவரிடம் பேட்டி எடுத்தார். அப்போது ராமேஸ்வர் கூறும்போது, “தக்காளி விலைஅதிகமாக இருக்கிறது. இதரகாய்கனிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அவற்றை வாங்கி வியாபாரம் செய்ய முடியவில்லை. வெறுங்கையோடு வீடு திரும்புகிறேன்’’ என்றுகண்ணீர் மல்க கூறினார். அவர் கண்கலங்கிய வீடியோ வைரலாக பரவியது.
கடந்த 14-ம் தேதி காய்கனி வியாபாரி ராமேஸ்வர், அவரது மனைவிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள தனது வீட்டில் விருந்து அளித்தார். இந்த வீடியோவை அவர் நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதில் காய்கனி வியாபாரி ராமேஸ்வருக்கு, ராகுல் உணவு பரிமாறி அவருடன் கலந்துரையாடுகிறார்.