Last Updated : 11 Dec, 2017 09:05 AM

 

Published : 11 Dec 2017 09:05 AM
Last Updated : 11 Dec 2017 09:05 AM

தமிழக அரசு அணைகளை சரியாக பராமரிப்பதில்லை: கர்நாடக மாநில விவசாய சங்கத் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ள அணைகளை மாநில அரசு உரிய முறையில் பராமரிப்பதில்லை என கர்நாடக மாநில விவசாய சங்கத் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் குற்றம்சாட்டி உள்ளார்.

கர்நாடக மாநில விவசாய சங்கத் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் பெங்களூருவில், 'தி இந்து'விடம் கூறியதாவது:

. கர்நாடகாவில் உதயமாகும் தென்னைபெண்ணை ஆறு கோலார், பெங்களூரு ஆகிய மாவட்டங்களைக் கடந்து ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சாத்தனூர், கடலூர் வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் பிரதான நீர்ப்பிடிப்பு பகுதி சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையும், பெங்களூருவில் ஓடும் சிற்றாறுகளும் தான். கடந்த 4 மாதங்களாக பெங்களூருவில் பெய்த கன மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது 2 டிஎம்சிக்கும் அதிகமான நீர் சென்றது.

இந்த நீர் கிருஷ்ணகிரி அணையை அடைந்ததால் செப்டம்பர் இறுதியிலேயே அதன் முழு கொள்ளளவை எட்டியது. பெங்களூருவில் இருந்து சென்ற நீர் சாத்ததனூர் அணையை விரைவாக அடைந்ததால் அதுவும் நிரம்பியது. கிட்டதட்ட 1 டிஎம்சி நீரை சேமிக்க வசதி இல்லாததால் தென்பெண்ணை ஆற்றில் ஓடி, வீணாக கடலில் கலந்திருக்கிறது.

இந்நிலையில் கடந்த 29-ம் தேதி கிருஷ்ணகிரி அணையின் மதகு கதவு உடைந்ததில் 1.4 டிஎம்சி நீர் வெளியேறியுள்ளது. அதாவது அணையில் இருந்த 90 சதவீதத்துக்கும் அதிகமான அளவுக்கு நீர் வெளியேறியதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. டிசம்பர் மாதத்திலேயே இந்த நிலை என்றால் மே மாதத்தில் குடிநீர் தேவைக்கும், பாசன தேவைக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் எங்கே போவார்கள்? விவசாயிகள் எப்படி வேளாண்மை செய்ய முடியும்?

தமிழக அரசும், அதிகாரிகளும் அணையை உரிய முறையில் பராமரிக்காமல் இருந்ததை இதற்குக் காரணம். இந்த நிலையால் தமிழக விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் கர்நாடக விவசாயிகளுக்கும் இழப்புதான். தமிழகம் வீணாக்கும் நீரை கர்நாடகா தேக்கி வைத்திருந்தால் இங்குள்ள விவசாயிகள் பயன் அடைந்திருப்பார்கள்.

அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சிய போக்கை விவசாய அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் தட்டிக்கேட்க வேண்டும். அணையை உரிய முறையில் பராமரிக்காமல் இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x