

போபால்: வளர்ப்பு நாய்கள் தெருவில் சண்டை போட்டதற்கு ஆத்திரம் அடைந்த தனியார் நிறுவன பாதுகாவலர் ஒருவர், 8 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ளது கிருஷ்ண பாக் காலனி. இங்கு கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு, ராஜ்பால் சிங் ரஜாவத் மற்றும் விமல் அச்சலா (35) ஆகிய 2 பேர் குறுகலான ஒரு தெருவில் தங்கள் வளர்ப்பு நாய்களுடன் சென்றுள்ளனர். அப்போது, 2 நாய்களும் சண்டையிட்டுக் கொண்டன. அதனால் 2 ரஜாவத், அச்சலா இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருவருக்கும் மோதல் முற்றியது. ஆத்திரம் அடைந்த ரஜாவத், முதல் மாடியில் உள்ள தனது வீட்டுக்கு ஓடினார். வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு வந்தார். பின்னர் தெருவில் இருந்தவர்களை எச்சரிக்கும் வகையில் வானத்தை நோக்கி ஒரு முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
8 பேர் மீது...: அதன்பின், தெருவில் இருந்தவர்கள் மீது அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், 8 பேர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து சரிந்து விழுந்தனர். அவர்களில் விமல் அச்சலா மற்றும் 27 வயது இளைஞர் ராகுல் வர்மா ஆகியோர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: துப்பாக்கிச் சூடு நடத்திய ராஜ்பால் ரஜாவத், வங்கியில் பாதுகாவலராக (செக்யூரிட்டி) பணியாற்றி உள்ளார். துப்பாக்கிக்கு உரிமம் வைத்திருந்ததால், அவரை வங்கி நிர்வாகம் வேலையில் நியமித்துள்ளனர். உயிரிழந்த விமல் அச்சலா, நிபானியா பகுதியில் சலூன் நடத்தி வந்துள்ளார். இந்த வழக்கில் ரஜாவத், அவரது மகன் சுதீர், அவரது உறவினர் சுபம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸார் கூறினார்.