Published : 19 Aug 2023 04:59 AM
Last Updated : 19 Aug 2023 04:59 AM

நடுக்கடலில் விஞ்ஞானியை காப்பாற்றிய இந்திய வீரர்களுக்கு சீன தூதரகம் நன்றி

ஆய்வுக் கப்பலில் இருந்து சிறப்பு கூண்டு மூலம் ஹெலிகாப்டருக்கு பத்திரமாக தூக்கப்பட்ட சீன விஞ்ஞானி.

மும்பை: அரபிக் கடல் பகுதியில் ஆய்வுக் கப்பலில் பயணம் செய்த சீன விஞ்ஞானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்தனர். இதற்கு சீன தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆய்வுக் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ஆய்வு கப்பல் கடந்த 16-ம்தேதி நள்ளிரவு மும்பையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் இருந்தது.

அப்போது கப்பலில் இருந்த சீன விஞ்ஞானியின் வெய்க்யாங் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக மும்பையில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு சீன ஆய்வுக் கப்பலில் இருந்துதகவல் அனுப்பப்பட்டது.

ஹெலிகாப்டரில் மீட்பு: உடனடியாக இந்திய கடலோரகாவல் படையின் 2 ஹெலிகாப்டர்கள் நடுக்கடலுக்கு விரைந்து சென்றன. ஆய்வுக் கப்பலை ஹெலிகாப்டர்கள் நெருங்கும் முன்பு சீன விஞ்ஞானிக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை, மருந்துகள் குறித்து தொலைத்தொடர்பு வாயிலாக தகவல் அளிக்கப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் சவாலான சூழலில் ஹெலிகாப்டர் மூலம் சீன விஞ்ஞானி மீட்கப்பட்டு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் உடல்நலம் தேறினார். பிறகு சீன ஆய்வுக் கப்பலின் பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதுகுறித்து இந்தியாவுக்கான சீன தூதரகம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மிகச் சரியான நேரத்தில் சீனரை மீட்டு அவருக்கு மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்த இந்திய கடலோர காவல் படைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கூறப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x