திருமணம் செய்வதாக 22 பெண்களை ஏமாற்றி ரூ.4.5 கோடி மோசடி செய்த குஜராத் போலி டாக்டர்

திருமணம் செய்வதாக 22 பெண்களை ஏமாற்றி ரூ.4.5 கோடி மோசடி செய்த குஜராத் போலி டாக்டர்
Updated on
1 min read

அகமதாபாத்: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 22 பெண்களிடம் ரூ.4.5 கோடியை மோசடி செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த போலி டாக்டரை போலீஸார் தேடி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 35 வயதான தோல் சிகிச்சை நிபுணர் ஒருவர், டாக்டர் திலீப் குமார் என்பவர் குறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார். திலீப் குமாரை, திருமணப் பதிவு இணையதளம் மூலம் சந்தித்ததாகவும் அவர் திடீரென மாயமாகிவிட்டதாவும் அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு அந்த பெண் டாக்டர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.மேலும், திலீப் குமார் தன்னை ஏமாற்றி ரூ.18 லட்சத்தை திருடிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் அவர் டாக்டரே இல்லை என்றும், இங்கிலாந்தில் வசித்து வரும் அவர், இதய நோய் டாக்டர் என்று தன்னைக் கூறி கொண்டு இதுவரை 22 பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அந்த பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடமிருந்து இதுவரை அவர் ரூ.4.5 கோடியை மோசடி செய்துள்ளார்.

தோல் நிபுணர் புகார்: இதுகுறித்து அகமதாபாத் சிஐடி (கிரைம்) சைபர்செல் பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொடக்கத்தில் குஜராத்தைச் சேர்ந்த அந்த தோல் நிபுணர்தன்னை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்து தனது பெயரை வெளியில் சொல்ல பயந்தார். பின்னர் அவரை நாங்கள் சமாதானம் செய்து உண்மைகளை வெளிக் கொண்டு வந்தோம்.

அப்போதுதான் அந்தப் பெண் டாக்டர், இங்கிலாந்தைச் சேர்ந்த போலி டாக்டரிடம் ஏமாந்தது தெரியவந்தது.

சமூக வலைத்தளங்களிலும், திருமணத் தகவல் பதிவு மையங்களிலும் தன்னை டாக்டர் என்றும், இருதய நோய் நிபுணர் (ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்) என்றும் பெயரைப் பதிவு செய்து அவர் பெண்களை ஏமாற்றி வந்துள்ளார்.

30 முதல் 40 வயதான பெண்களாகப் பார்த்து தன்னுடைய காதல் வலையை விரித்து அவர்களிடம் நம்பிக்கையை வரவழைத்து அவர் பணத்தைப் பறித்துள்ளார். மேலும் அந்தப் பெண்களுக்கு மிகவும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை இங்கிலாந்திலிருந்து வாங்கி வருவதாகவும் கூறி அந்தப் பெண்களிடம் பணத்தை ஏமாற்றியுள்ளார்.

அவரைத் தீவிரமாகத் தேடி வருகிறோம். 22 பெண்களை ஏமாற்றி இதுவரை ரூ.4.5 கோடியை மோசடி செய்துள்ளார். அந்த நபர், மேலும் சில பெண்களை ஏமாற்றியிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இவ்வாறு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in