Published : 19 Aug 2023 06:18 AM
Last Updated : 19 Aug 2023 06:18 AM
பெங்களூரு: கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நிலுவை நீரை வழங்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதனிடையே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கர்நாடகாவுக்கு எதிராக வழக்கு தொடுத்தது. இதையடுத்து கர்நாடக அரசு தமிழகத்துக்கு 10 டிஎம்சி நீரை திறந்துவிட உத்தரவிட்டது.
இதற்கு பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கர்நாடகாவில் மழைபற்றாக்குறையால் இங்குள்ள விவசாயிகளுக்கே இன்னும் நீர் திறக்கப்படவில்லை. ஆனால் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட்டுள்ளது. காங்கிரஸ் அரசு கர்நாடக விவசாயிகளின் நலனைபாதுகாக்க தவறிவிட்டது. தமிழகத்துக்கு திறக்கப்பட்டிருக்கும் நீரை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்றார்.
மஜத மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி கூறுகையில், ‘‘கர்நாடக அரசுக்கு கர்நாடக விவசாயிகளின் நலனில் அக்கறை இல்லை. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ளது. அவர்களை மகிழ்விப்பதற்காகவே கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு காவிரியில் நீர் திறந்துவிட்டுள்ளது. கர்நாடக அரசு நீரை திறக்காவிடில் அவர்களின் இண்டியா கூட்டணியில் குழப்பம் வரும். கர்நாடக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸூக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்’’ என கண்டித்துள்ளார்.
நேற்று மாலை நிலவரப்படி, மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணாவில் 124 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 110.20 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 78 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு 15 ஆயிரத்து 184 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மைசூரு மாவட்டத்தில், கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2282.10 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2,022 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 6,825 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு, மொத்தமாக விநாடிக்கு 22 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மேகேதாட்டு அருகே காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடக விவசாய அமைப்பினர் நேற்று ஸ்ரீரங்கப்பட்ணா அருகே காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக அணைகளில் போதிய நீர் இல்லாத நிலையில் தமிழகத்துக்கு நீரை திறக்கக்கூடாது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசு கர்நாடக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக குற்றம்சாட்டினர். பின்னர் போலீஸார் அவர்களை ஆற்றில் இருந்து மேலே தூக்கி வந்து கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT