Published : 16 Dec 2017 09:37 AM
Last Updated : 16 Dec 2017 09:37 AM

குஜராத் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மாநிலங்களவைக்கு முதல்முறையாக வந்த அமித் ஷா: பாஜக எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு

மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, நேற்று நடைபெற்ற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் முதன்முறையாக பங்கேற்றார். மாநிலங்களவைக்கு அவர் வந்ததும், அங்கிருந்த பாஜக எம்.பி.க்கள் கரகோஷம் எழுப்பி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குஜராத்திலிருந்து பாஜக சார்பில் மாநிலங்களவைக்கு அமித் ஷா கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத் எம்எல்ஏ, அமைச்சர், பாஜக தலைவர் உள்ளிட்ட பதவிகளை அவர் வகித்திருந்தாலும், மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றது இதுவே முதன்முறை.

இந்நிலையில், டெல்லியில் நேற்று தொடங்கிய நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் அமித் ஷா முதன்முறையாக கலந்து கொண்டார். மாநிலங்களவை அலுவல்கள் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அவர் அவைக்கு வந்தார். அவரை வரவேற்கும் விதமாக, பாஜக எம்.பி.க்கள் அனைவரும் கரகோஷங்களையும், வாழ்த்து முழக்கங்களையும் எழுப்பினர்.

அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி வந்த அமித் ஷா, தமக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் அமர்ந்திருக்கும் இருக்கைகள் அமைந்துள்ள பகுதிக்கு அடுத்துள்ள பகுதியில் அவருக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

அமித் ஷாவின் இருக்கையானது இதற்கு முன்பு வெங்கய்ய நாயுடுவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அவர் குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவரது இருக்கை அமித் ஷாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x