Published : 19 Dec 2017 09:43 AM
Last Updated : 19 Dec 2017 09:43 AM

பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, படேல் சமூக கிளர்ச்சி, சிறுபான்மையின எதிர்ப்புகளைத் தாண்டி குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்தது பாஜக: 6-வது முறையாக வெற்றி பெற்று சாதனை; வளர்ச்சிக்கான வெற்றி என பிரதமர் மோடி பெருமிதம்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து 6-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்க போராடிய காங்கிரஸ் கட்சி இந்த முறையும் தோல்வி அடைந்தது.

குஜராத்தில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் கடந்த 2015-ம் ஆண்டு போராட்டத்தில் குதித்தனர். ஹர்திக் படேல் என்ற இளைஞரின் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. இதனால் பாஜக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இதனிடையே, மாட்டிறைச்சி விவகாரத்தில் தலித்துகள் மீது இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாஜகவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதுபோல இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) அமைப்பினரும் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக களம் இறங்கினர். ஏற்கெனவே சிறுபான்மையின மக்களின் வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்காது என்ற நிலையில் சாதி ரீதியிலான எதிர்ப்பும் சேர்ந்து கொண்டு பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தின.

இதுமட்டுமல்லாமல், பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியதால் தொழில் மாநிலமான குஜராத்துக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சிறுதொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாயின.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இமாச்சல பிரதேச மற்றும் குஜராத் மாநில தேர்தல் அறிவிப்பு வெளியாக இருந்த நிலையில், இமாச்சல பிரதேச பேரவைத் தேர்தல் தேதி மட்டும் அறிவிக்கப்பட்டது. குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனிடையே, ஜிஎஸ்டி கவுன்சில் கூடி, வரி விகிதத்தில் பெருமளவு மாற்றம் செய்தது. அதன் பிறகு ஒரு வழியாக குஜராத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

எனினும், ஹர்திக் படேல் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என அறிவித்தார். இதுபோல ஓபிசி பிரிவைச் சேர்ந்த தலைவர் அல்பேஷ் தாக்கோர் மற்றும் தலித் பிரிவு தலைவர் ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோரும் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தனர். தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் தீவிரமாக ஈடுபட்டனர்.

182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. 68.41 சதவீத வாக்குகள் பதிவாயின. நேற்று 33 மாவட்டங்களில் மொத்தம் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

தொடக்கத்தில் பாஜக முன்னிலை பெற்றபோதிலும் ஒருகட்டத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. பின்னர் மீண்டும் பாஜக முன்னிலை வகித்தது. இறுதியில் பாஜக 99 தொகுதிகளை கைப்பற்றியது. இதன்மூலம் ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பு நீக்கம், படேல் சமூக கிளர்ச்சி, சிறுபான்மையின எதிர்ப்புகளைத் தாண்டி பாஜக தொடர்ந்து 6-வது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

காங்கிரஸ் கூட்டணி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் 77, பாரதிய டிரைபல் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றன. மேலும் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானியும் வெற்றி பெற்றுள்ளார். தேசியவாத காங்கிரஸ் 1 இடத்திலும் சுயேச்சை வேட்பாளர்கள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

ராஜ்கோட் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் விஜய் ருபானி வெற்றி பெற்றார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் இந்திரானில் ராஜ்யகுருவை 54,300 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதுபோல, துணை முதல்வர் நிதின் படேலும் வெற்றி பெற்றார். முதல்வராக இருந்தபோது மோடி போட்டியிட்ட மணிநகர் தொகுதியில் 75,199 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றது.

பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 1995-ம் ஆண்டு பாஜக முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. எனினும் உட்கட்சி பூசல் காரணமாக 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யவில்லை. இதையடுத்து 1998-ல் தேர்தல் நடந்தது. அப்போது முதல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. கடைசியாக, 2012-ல் நடந்த தேர்தலில் பாஜக 115 இடங்களிலும் காங்கிரஸ் 61 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.

வளர்ச்சிக்கான வெற்றி

தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், “பாஜக மீது அன்பும் நம்பிக்கையும் வைத்து வாக்களித்த குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில மக்களுக்கு தலை வணங்குகிறேன். வளர்ச்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் எங்களுடைய வளர்ச்சி பயணத்தை தொடர்வோம் என்றும் மக்களுக்காக அயராது பாடுபடுவோம் என்றும் உறுதி அளிக்கிறேன். நல்ல நிர்வாகம் மற்றும் வளர்ச்சி அடிப்படையிலான அரசியலுக்கு மக்களின் வலுவான ஆதரவு இருக்கும் என்பதை இந்தத் தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது. இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த கட்சியினருக்கு என்னுடைய வணக்கத்தை செலுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது: உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. தற்போது குஜராத், இமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றிருப்பது மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மக்கள் தயாராக இருப்பதை உணர்த்துகிறது. இதன் மூலம் ஜிஎஸ்டி வரி குறித்து விமர்சனம் செய்தவர்களின் கன்னத்தில் பலத்த அறை விழுந்துள்ளது.

குஜராத்தில் கடந்த 1995-ல் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அன்று முதல் இன்று வரை வெற்றிப் பயணம் தொடர்கிறது. குஜராத்தில் சாதியை ஒழிக்க பாஜக தீவிரமாக பாடுபட்டு வருகிறது. ஆனால் ஆட்சி, அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு சிலர் சாதி வெறியை தூண்டி வருகின்றனர். அவர்களை குஜராத் மக்கள் புறக்கணித்துள்ளனர்.

இவ்வாறு மோடி பேசினார்.

வாக்காளர்களுக்கு நன்றி

பாஜக தலைவர் அமித் ஷா ட்விட்டரில், “மோடியின் செல்வாக்கு மற்றும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் காரணமாக, குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. வாரிசு, சாதி அரசியலுக்கு எதிராகவும் மோடியின் வளர்ச்சி திட்டங்களுக்காகவும் மக்கள் வாக்களித்துள்ளனர். பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி. வெற்றிக்காக பாடுபட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x