Published : 21 Dec 2017 10:09 AM
Last Updated : 21 Dec 2017 10:09 AM

9 மாநிலங்களில் கூட்டணி அரசையும் சேர்த்து 19 மாநிலங்களில் பாஜக ஆட்சி: இந்திராவின் சாதனையை மிஞ்சியதாக பிரதமர் மோடி பேச்சு

நாட்டில் 9 மாநிலங்களில் கூட்டணி அரசையும் சேர்த்து, 19 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடப்பதாகவும் இந்திரா காந்தி காலத்தில் கூட 18 மாநிலங்களில்தான் காங்கிரஸ் ஆட்சி நடந்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைகளுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் குஜராத்தில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸிடம் இருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த வெற்றிக்குப் பிறகு பாஜக எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக எம்.பி.க்கள் எழுந்து நின்று கரவொலி செய்து வரவேற்பு கொடுத்தனர். வெற்றியைக் கொண்டாடும் விதமாக பிரதமருக்கு பாஜக தலைவர் அமித் ஷா இனிப்பு ஊட்டினார்.

கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

குஜராத்தில் 6-வது முறை பாஜக ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. இமாச்சலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது மிகப் பெரிய வெற்றி. தற்போது நாட்டின் 19 மாநிலங்களில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கூட 18 மாநிலங்களில்தான் காங்கிரஸ் ஆட்சி மற்றும் கூட்டணிகளின் ஆட்சி நடந்தது. இதனை மிஞ்சி சாதனை படைத்துள்ளோம். குஜராத், இமாச்சல் மாநிலங்களின் தேர்தல் வெற்றிக்கு கட்சியினரின் உழைப்புதான் காரணம்.

பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இருந்தாலும் கட்சியினர் மெத்தனமாக இருக்கக் கூடாது. விரைவில் சில மாநிலங்களில் நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற பாஜகவினர் இப்போதிருந்தே கடுமையாக உழைக்க வேண்டும். நாடு முழுவதும் பாஜகவை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்த வேண்டும்.

2022-ம் ஆண்டில் புதிய இந்தியா என்ற லட்சியத்தை நோக்கி பயணிக்கிறோம். புதிய இந்தியா உருவாக கட்சியில் இளைஞர்களை ஊக்குவித்து அவர்களை வளர்க்க வேண்டும். குஜராத்தில் அப்படித்தான் கட்சியை வளர்த்தோம். என்னைவிட 14 வயது இளையவரான அமித் ஷாவை கட்சியி்ல் நான் வளர்த்தேன். இன்று கட்சியின் தலைவராகி அவர் சிறப்பாக பணியாற்றுகிறார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து நான் குஜராத்தில் கட்சிப் பணிக்கு வந்தபோது நான் பிரபலமானவன் இல்லை. ஆனாலும், 1999-ல் நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத்தில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியபோது பிரதமர் வாஜ்பாய் என்னை வாழ்த்தினார். அதுபோல இளைஞர்களை கட்சியினர் ஊக்கப்படுத்த வேண்டும்.

பாஜக மீது எதிர்க்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். அந்தக் குற்றச்சாட்டுக்களுக்காக கட்சியினர் கோபப்படாமல் மக்களிடம் உண்மையை விளக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். குஜராத்தில் கட்சியை வளர்த்தது பற்றியும் வாஜ்பாய் பற்றியும் குறிப்பிடும்போது மோடி உணர்ச்சி வசப்பட்டார். மோடியின் பேச்சு விவரங்களை கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அனந்த குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ‘‘குஜராத் தேர்தல் தோல்வியில் வெற்றியை பார்க்கும் காங்கிரஸின் முயற்சி நகைப்புக்குரியது’’ என்றார்.

எந்த மாநிலத்தில் எந்த கட்சி..

நாட்டில் மொத்தம் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சி செய்யும் கட்சிகளின் விவரம்:

பாஜக ஆளும் மாநிலங்கள் : இமாச்சல், ஹரியாணா, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், அருணாச்சல்.

பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்கள்: காஷ்மீர், மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா, பிஹார், சிக்கிம், மணிப்பூர், நாகாலாந்து, அசாம்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் : பஞ்சாப், கர்நாடகா, புதுச்சேரி, மிசோரம், மேகாலயா.

பிற கட்சிகள் ஆளும் மாநிலங்கள்: தமிழ்நாடு (அதிமுக), தெலங்கானா (தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி), மேற்கு வங்கம் (திரிணமூல் காங்.), ஒடிஷா (பிஜு ஜனதா தளம்), டெல்லி (ஆம் ஆத்மி), கேரளா மற்றும் திரிபுரா (இடதுசாரிகள்).

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x