

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு 93 கைதிகளை விடுவிக்க உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.
வரும் டிச.25-ம் தேதி அடல் பிஹாரி வாஜ்பாயி, தனது 93-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரின் பிறந்த தினத்தைச் சிறப்பிக்கும் விதமாக யோகி அரசு, 93 கைதிகளை விடுதலை செய்யத் திட்டமிட்டுள்ளது.
கைதிகள் அனைவரும் தண்டனைக் காலம் முடிந்தும் அபராதத் தொகையைச் செலுத்தாததால் தொடர்ந்து சிறையில் இருப்பவர்கள் ஆவர்.
இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரத்தில் கூறும்போது, ''அபராதத் தொகையை என்ஜிஓக்கள், தொண்டு நிறுவனங்கள் செலுத்தும் என்பதையும் அவர்களின் தண்டனைக் காலம் முடிவடைந்ததையும் உறுதி செய்தபிறகு, கைதிகள் விடுதலை செய்யப்படுவர்'' என்று தெரிவித்தனர்.
வாஜ்பாயி 1991, 1996, 1998, 1999 மற்றும் 2004 ஆண்டுகளில் 5 முறை லக்னோ தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுகுறித்துப் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் மணி திரிபாதி, ''பிரதமர் பதவிக் காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்த காங்கிரஸ் அல்லாத முதல் தலைவர் வாஜ்பாயி. லக்னோ மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை அறிமுகப்படுத்தினார்'' என்றார்.