தனி குருத்வாரா கமிட்டி விவகாரம்: அகாலி தளம் மாநாட்டுக்கு தடை

தனி குருத்வாரா கமிட்டி விவகாரம்: அகாலி தளம் மாநாட்டுக்கு தடை
Updated on
1 min read

ஹரியாணா மாநிலத்தில் தனி குருத்வாரா அமைப்பதை எதிர்த்து அகாலி தளம் சார்பில் சிறப்பு சீக்கியர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு சீக்கிய மதத்தின் ஐந்து தலைமை அமைப்புகளில் ஒன்றான அகால் தக்த் தடை விதித்துள்ளது.

ஹரியாணாவில் தனி குருத்வாரா அமைக்க அந்த மாநில சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஹரியாணா குருத்வாராவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பஞ்சாப் மாநிலத்தின் ஆளும் கட்சியான அகாலி தளம், சீக்கிய தலைவர்கள் சார்பில் அமிர்தசரஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை பிரமாண்ட ஆன்மிக மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதேபோல் ஹரியாணா மாநிலம் கர்னூலில் திங்கள்கிழமை பிரமாண்ட மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமிர்தசரஸ் மாநாடு ரத்து

இதனால் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதை தடுக்கும் வகையில் சீக்கிய மதத்தின் ஐந்து தலைமை அமைப்புகளில் ஒன்றான அகால் தக்த், அமிர்தசரஸ், கர்னூல் மாநாடுகளுக்கு தடை விதித்துள்ளது. இதை ஏற்று இரு மாநாடுகளும் ரத்து செய்யப் பட்டுள்ளன. இதுகுறித்து சிரோமணி பிரபந்த கமிட்டியின் சிறப்பு குழுத் தலைவர் அவதார் சிங் மக்கர் அமிர்தசரஸ் நகரில் நிருபர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த சீக்கிய தலைவர்கள் அகால் தக்த்-க்கு வந்து பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும். இப்போதுள்ள சூழ்நிலையில் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கக் கூடாது. அமைதியான வழியில் பேசித் தீர்க்க வேண்டும்.

பஞ்சாபிலோ, ஹரியாணா விலோ ஆன்மிக மாநாடுகள் நடத்தக்கூடாது என்று அகால் தக்த் தடை உத்தரவுப் பிறப் பித்துள்ளது. இதை இரு மாநில தலைவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றார்.

அமரீந்தர் சிங் வரவேற்பு

அகால் தக்த் அமைப்பின் தடை உத்தரவை காங்கிரஸ் மூத்த தலைவர் அம்ரீந்தர் சிங் எம்.பி. வரவேற்றுள்ளார். அகால் தக்த் சரியான நேரத்தில் தலையிட்டுள்ளது, பஞ்சாப், ஹரியாணா சீக்கிய தலைவர்கள் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய நிர்வாகிகள்

தனி குருத்வாரா கமிட்டி அமைக்கும் முடிவை கைவிடுமாறு ஹரியாணா மாநில அரசை மத்திய அரசும் கேட்டுக் கொண்டுள்ளது. இதனை ஹரியாணா அரசு ஏற்க மறுத்துள்ளது. இதனி டையே ஹரியாணா மாநில குருத்வாராவுக்கு 41 பேர் அடங்கிய புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஹரியாணா குருத்வாராவுக்கு அகால் தக்த் அமைப்பு ஆசி வழங்க வேண்டும் என்று புதிய நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in