மோடி மீதான ஸ்டாலின் விமர்சனம் முதல் மணிப்பூர் அப்டேட் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஆக.17, 2023

மோடி மீதான ஸ்டாலின் விமர்சனம் முதல் மணிப்பூர் அப்டேட் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஆக.17, 2023
Updated on
3 min read

மதுரை எய்ம்ஸ்... 2024 தேர்தல் நாடகமா? - முதல்வர் ஸ்டாலின்: ராமநாதபுரத்தில் திமுகவின் தென் மண்டல வாக்குசாவடி முகவர் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசும்போது, “கடந்த 2015-ஆம் ஆண்டு அறிவித்த எய்ம்ஸ் டெல்லியில் இருந்து டெண்டர் அளவுக்கு உருண்டு வரவே சுமார் 9 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இனியாவது விரைவாக கட்டி முடிப்பார்களா, இல்லை, இதுவும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாடகமா என்று தெரியவில்லை” என்று பேசினார். அத்துடன், தமிழகத்துக்கு பாஜக அறிவித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றியது என்ன? என்று பட்டியலிட்டு அவர் கேள்வி எழுப்பினார்.

மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு டெண்டர் வெளியீடு: மதுரை எய்ம்ஸ் கட்டிடப் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இரு கட்டங்களாக 33 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என ஒப்பந்த காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிதி கிடைத்துள்ளதால் இந்த ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள்: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன் பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பு: நாங்குநேரியில் வீடு புகுந்து பள்ளி மாணவரும், அவரது தங்கையும் வெட்டப்பட்ட சாதிய வன்முறைச் சம்பவம் தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநரிடம் நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். மேலும், இந்த அறிக்கையுடன் சில பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலின பேத வார்த்தைகளுக்கு விடைகொடுத்த உச்ச நீதிமன்றம்: பெண்களுக்கு தவறான முத்திரை குத்தும் பாலின பேத வார்த்தைப் பிரயோகங்களை நீக்கி புதிய சட்டக் கையேட்டை வெளியிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இந்தக் கையேட்டினை வெளியிட்டுள்ளார். ஹவுஸ் ஒயிஃப், நம்பிக்கைக்குரிய அல்லது கீழ்ப்படிதலுள்ள மனைவி, ஹெர்மாஃப்ரோடைட், ஈவ் - டீஸிங், தந்தை பெயர் தெரியாத குழந்தை, சைல்ட் ப்ராஸ்டிட்யூட் உள்பட பல வார்த்தைகளைப் பயன்பாட்டில் இருந்து நீக்கி இந்தக் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

“பழங்குடி மாவட்டங்களுக்கு தனி உயர் அதிகாரிகள் தேவை”: மணிப்பூரில் ஆளும் பாஜக ஆட்சியைச் சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட குகி ஸோ எம்எல்ஏக்கள் 10 பேர், பிரதமர் நரேந்திர மோடியிடம் மனு ஒன்றினை சமர்ப்பித்துள்ளனர். அதில் சுராசந்த்பூர், கான்க்போக்பி, சாந்தேல், தென்நவுபால், பெர்சாவ்ல் ஆகிய ஐந்து மலை மாவட்டங்களில் சிறப்பான நிர்வாகத்தினை உறுதி செய்ய தலைமைச் செயலர் மற்றும் காவல் துறை இயக்குநருக்கு நிகரான உயர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

“மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது; ஆனால், பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் குறித்து டெல்லி சட்டப்பேரவையில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசிய நிலையில், பாஜக உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவையில் பேசிய முதல்வர் கேஜ்ரிவால், "மணிப்பூர் பிரச்சினையில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என பாஜக எம்எல்ஏக்கள் தெளிவாகத் தெரிவித்துவிட்டனர். இதே செய்தியைத்தான் பிரதமர் மோடியும் தெரிவித்துள்ளார்" என்றார்.

விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது விக்ரம் லேண்டர்: சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்து நிலவின் சுற்றுப் பாதையில் பயணித்து வருகிறது. வரும் 23-ம் தேதி லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அதிலிருந்து பிரக்யான் ரோவர் நிலவில் ஆய்வுப் பணியை மேற்கொள்ள உள்ளது.

விஸ்வகர்மா திட்டத்தால் யார் யாருக்கு பலன்?: 18 முக்கிய பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு ரூ.13,000 கோடி மதிப்பில் கடனுதவி, திறன் மேம்பாடு அளிக்கும் ‘பிஎம் விஸ்வகர்மா’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விஸ்வகர்மா ஜெயந்தியான செப்டம்பர் 17-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்த நிலையில், தச்சு வேலை, படகு தயாரிப்பு, இரும்புக் கொல்லர், ஆயுதங்கள் தயாரிப்பு, சுத்தியல் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பு, பூட்டு தயாரிப்பு, பொற்கொல்லர், மண்பாண்டக் கலைஞர், சிற்பி, கல் உடைப்பவர், காலணி தைக்கும் கலைஞர், கொத்தனார், கூடை - பாய் - துடைப்பம் - தேங்காய் நார் மூலம் கால்மிதியடி தயாரிப்போர், பொம்மை கலைஞர்கள், முடிதிருத்துவோர், பூ மாலை தயாரிப்பவர், சலவை தொழிலாளர், தையல் கலைஞர், மீன்பிடி வலை தயாரித்தல் ஆகிய 18 வகையான பாரம்பரிய தொழில்களை பாரம்பரியமாக அல்லது குரு-சிஷ்ய முறைப்படி மேற்கொள்ளும் கலைஞர்களுக்கு தேவையான உதவிகளை பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு இத்திட்டம் மூலம் பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டையுடன் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை 5 சதவீத தள்ளுபடி வட்டியில் கடன் உதவி வழங்கப்படும். இத்திட்டம் மூலம் திறன்களையும் அவர்கள் மேம்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

“இந்தத் திட்டம் குறித்து சில பகுதிகளில் சில கருத்துகள் நிலவலாம். ஆனால், இந்தியாவின் கைவினைத் திறனை உலகிற்கு வெளிப்படுத்தக்கூடிய, நாடு முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் திட்டம்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

இமாச்சல், உத்தராகண்ட் - இதுவரை 81 பேர் பலி: இடைவிடாது பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் இதுவரை 81 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பஞ்சாப் மாநிலத்திலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in