

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திரதின உரை தொழில்துறைக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாக தொழிற்துறை கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ): பிரதமரின் சுதந்திர தின உரை கடந்த பத்தாண்டுகளில் அரசின் சாதனையை பட்டியலிட்டு காட்டியுள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான வழிகாட்டல்கள் அந்த உரையில் இடம்பெற்றுள்ளன.
இந்தியா தற்போது ஒரு திருப்புமுனையான காலகட்டத்தில் உள்ளது. கரோனாவுக்குப் பிறகு உலக நாடுகளை வழிநடத்தும் வலிமையை இந்தியா பெற்றுள்ளது. பிரதமர் கூறியபடி அடுத்த5 ஆண்டுகளில் புதிய இந்தியாவுக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. உலக பொருளாதாரத்தில் இந்தியா முதல் மூன்று இடங்களுக்குள் நிச்சயம் இடம்பெறும் என சிஐஐ பொது இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி தெரிவித்தார்.
"77-வது சுந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து பிரதமர் மோடி ஆற்றிய உரை, 2047-க்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற உத்வேகத்தை, உறுதியை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா விரைவில் உருவெடுக்கும்" என அசோசெம் பொது செயலர் தீபக் சூட் கூறினார்.