Published : 16 Aug 2023 04:10 AM
Last Updated : 16 Aug 2023 04:10 AM

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாகும்: டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி உறுதி

சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி.

புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார்.

சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 10-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் நேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஒன்றரை மணி நேர உரையில் அவர் கூறியதாவது: மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு போன்ற எண்ணற்ற மாவீரர்களின் தியாகத்தால் இந்தியா சுதந்திரம் அடைந்தது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன்.

மணிப்பூர் வன்முறை: கடந்த சில வாரங்களாக மணிப்பூரில் நீடித்த வன்முறையில் பலர் உயிரிழந்துள்ளனர். அந்த மாநில தாய்மார்கள், மகள்களின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்பட்டது. தற்போது மணிப்பூரில் அமைதி திரும்பி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கிறது. அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டும். மணிப்பூர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில அரசும், மத்திய அரசும் தொடர்ந்து முயற்சி செய்யும்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளோம். இப்போது அமிர்த காலத்தின் முதலாம் ஆண்டில் இருக்கிறோம். இன்றைய நமது முயற்சிகள், செயல்கள், தியாகங்கள் அடுத்த 1,000 ஆண்டு கால பொற்கால வரலாற்றுக்கு வழிவகுக்கும்.

கடந்த 2014-ல் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. இப்போது 5-வது இடத்துக்கு நாடு முன்னேறியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். வரும் 2047-ம் ஆண்டில் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுத்திருக்கும்.

தாய்மொழிக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். இந்த நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. அதற்காக உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி.

3 தீமைகளை எதிர்த்து போர்: இந்தியாவின் கனவுகள் நனவாக வேண்டுமானால், ஊழல், வாரிசு அரசியல், ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் வாக்கு வங்கி அரசியல் ஆகிய 3 தீமைகளுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேற்ற பாதையில் செல்ல முடியும். இதை கருத்தில் கொண்டு ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றப் பத்திரிகைகள் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்துள்ளது. ஜாமீன் பெறுவதுகூட கடினமாகிவிட்டது.

சொந்த, பந்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நேபோடிசம், திறமைகளின் எதிரி. இதில் இருந்து நாடு விடுதலை பெற வேண்டும். அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் வாக்குவங்கி அரசியல் சமூகநீதிக்கு எதிரானது. இதை தடுக்கவேண்டும். ஊழலை ஒருபோதும் சகித்துக்கொள்ள கூடாது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x