

சிம்லா: இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு மாநிலங்களுக்கும், இந்திய வானிலை துறை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இமாச்சலப் பிரதேசம், உத்தரா கண்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் இரு மாநிலங்களிலும் 58 பேர் உயிரிழந்தனர். பல கட்டிடங்கள், கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. இரு மாநிலங்களிலும் வளர்ச்சிப் பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் சுதந்திர தின விழா நேற்று, கலாச்சார நிகழ்ச்சிகள் எதுவும் இன்றி எளிமையாக நடத்தப்பட்டதாக இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ‘‘மாநிலத்தில் இதுவரை 55 பேர்உயிரிழந்துள்ளனர், இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். மீட்புபணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறோம்’’ என்றார்.
இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்ட சிம்லாவில், இதுவரை14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மாண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்தில் உள்ள நைட் லைஃப் பாரடைஸ் கேம்ப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தார், இன்னும் 4 பேர் நிலச்சரிவில் சிக்கியிருப்பர் என அஞ்சப்படுகிறது. உத்தராகண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷில், மிகஅதிக கனமழை கடந்த திங்கள்கிழமை பதிவாகியது. இங்கு கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்தனர். 10 பேரை காணவில்லை. நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத், கேதர்நாத் மற்றும் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் சாலைகள் சேதம் அடைந்துள்ளன.
இதனால் சார்தாம் யாத்திரை 2 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கல்கா-சிம்லா, கிரத்பூர் - மணாலி, பதன்கோட் -மாண்டி, தர்மசாலா-சிம்லா வழித்தடங்களில் முக்கிய நெடுஞ்சாலைகளில் நேற்று முன்தினம் போக்குவரத்து தடைபட்டது.
உத்தராகண்ட் ஜோஷிமத் பகுதியில் உள்ள சுனில் கிராமத்தில் நிலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தி, பல பகுதிகளை பார்வையிட்டார்.