Published : 06 Nov 2017 09:36 AM
Last Updated : 06 Nov 2017 09:36 AM

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்

விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த முடியவில்லை என்றால் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 16 மாதங்களில் சமையல் காஸ் விலை 19 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் கூறியிருப்ப தாவது:

சமையல் காஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ரேஷன் பொருட்களின் விலையும் அதிகரித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெற்றுப் பேச்சுகளை நிறுத்திக் கொண்டு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். இல்லையெனில் பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி விலக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடியாக பாஜக மூத்த தலைவர் சாம்பித் பத்ரா, ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், கடந்த காங்கிரஸ் ஆட்சி ஊழல் மயமாக இருந்தது. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடியது. அப்படியிருக்கும்போது இளவரசர் (ராகுல் காந்தி) ஆட்சி அரியணைக்கு பொருத்தமானவரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பாஜகவும் காங்கிரஸும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக சமூக வலைதளங்களில் இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x