

சமூக நலத்திட்டங்களுக்கான திட்டச் செலவினத்தொகையை ரூ.5,75,000 கோடியாக அதிகரிக்க மத்திய பட்ஜெட்டில் முன்மொழியப் பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டை விட இது 26.9% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் மற்றும் தேசிய ஊரகச் சுகாதாரம் ஆகியவை உள்ளிட்ட சமூகநலத் திட்டங்களுக்காக செலவு செய்யும் தொகை நடப்பு நிதியாண்டில் 26.9% அதிகரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு செய்யும் நிதியுதவிகளும் அடங்கும். இதனை முந்தைய அரசு ரூ.4,75,532 கோடியாக வைத்திருந்தது. நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க சமூக நலத்திட்டங்களுக்கான திட்டச் செலவினத்தை முந்தைய அரசு குறைத்தது.
இது பற்றி அருண் ஜேட்லி தெரிவிக்கும்போது, "திட்டச் செலவினம் என்பது விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் திறன் உருவாக்கம், ஊரகச் சாலைகள், தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைபுகள், ரயில்வே நெட்வொர்க் விரிவாக்கம், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிசக்தி திட்டங்கள், நீராதார வளர்ச்சி மற்றும் நதிகளைப் பராமரித்தல் ஆகியவற்றை முதன்மை அக்கறைகளாகக் கொண்டது.
இதற்கு அதிக நிதி ஒதுக்குவது என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும்” என்று தெரிவித்தார்.