Published : 08 Jul 2014 08:26 AM
Last Updated : 08 Jul 2014 08:26 AM

ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய ரயில் சேவைகள், திட்டங்கள் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின் முதல் ரயில்வே பட்ஜெட் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட்டுக்கு முன்னதாகவே ரயில் கட்டணத்தை 14.2 சதவீதம் உயர்த்திவிட்டதால், மேலும் கட்டண உயர்வு இருக்காது.

ரயில்வே துறை ரூ.26,000 கோடி இழப்பைச் சந்தித்து வந்த போதும், புதிய ரயில் சேவைகள், திட்டங்கள் குறித்த அறிவிப்பு இருக்கும் என தெரிகிறது.

ரயில் நிலையங்களை நவீனப்படுத்துவதற்கு தனியார் துறையினரின் பங்கேற்பு இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்திருந்தார். இதனால், தனியார் துறையை அனுமதிப்பது குறித்த அறிவிப்பு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சாத்தியமற்ற சில திட்டங்கள் கைவிடப்படலாம். எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், சூரிய மின்சக்தித் திட்டங்கள், பயோ-டீசல் ஆகியவை தொடர்பான அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.

பல்வேறு புனித யாத்திரைத் தலங்களுக்கு புதிய ரயில் சேவைகள் அறிவிக்கப்படலாம். அதிவேக ரயில்களுக்கான வைர நாற்கரப் பாதை திட்டம், நேரடி அந்நிய முதலீடு தொடர்பான அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.

பயணிகளின் பாதுகாப்புக்காக சதாப்தி மற்றும் மும்பை புறநகர் மின்சார ரயில் பெட்டிகளில் தானியங்கிக் கதவு பொருத்தும் திட்டத்தை சதானந்த கவுடா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக், ட்விட்டர் கணக்கு தொடக்கம்:

இதனிடையே, ரயில்வே துறையின் அதிகாரபூர்வ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் திங்கள்கிழமை மாலை தொடங்கப்பட்டன.

பட்ஜெட் விவரங்களும், இதர விவரங்களும் உடனுக்குடன் இந்த சமூக வலைத்தளங்களில் வெளியிடப் படும் என சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x