Published : 17 Nov 2017 03:01 PM
Last Updated : 17 Nov 2017 03:01 PM

உயிருக்குப் போராடிய குழந்தை; 516 கி.மீ தூரத்தை 6.45 மணி நேரத்தில் கடந்து மருத்துவமனையில் சேர்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்- குவியும் பாராட்டுகள்

கேரளாவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் 500 கிமீ தூரத்தை 6 மணி 45 நிமிடத்தில் கடந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு செல்ல சுமார் 14 மணி நேரங்கள் பிடிக்கும். ஆனால் ஆம்புலன்ஸ் டிரைவர் ஹமீம் வெறும் 6 மணி 45 நிமிடத்தில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தை அடைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

இதில் ஆம்புலன்ஸ் செல்லும் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க ஹமீக்கும் கேரள அரசும், கேரள போக்குவரத்து காவல்துறையும் பெரும் உதவி புரிந்துள்ளது.

கேரளாவின் கடற்கரை நகரமான காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த தமீம், கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த புதன்கிழமை இரவு கண்ணூர் முதல் திருவனந்தபுரம் செல்லும் சாலையில் ஓர் உயிரை காப்பாற்றக்கூடிய ஓட்டத்தில் ஹமீம் ஈடுபடப்போவது அவருக்கான தொலைபேசி அழைப்பு வரும் வரை அவர் அறிந்திருக்கவில்லை.

அழைப்பு ஒலித்தது..... பிறந்து முப்பது நாட்களேயான, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஃபாத்திமா என்ற பெண் குழந்தையை இருதய அறுவை சிகிச்சைக்காக கண்ணூரிலிருந்து தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ சித்ரா மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று தமீமுக்கு கூறப்பட்டது.

ஃபாத்திமாவின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்ததால் அவரை விமான மூலம் அழைத்துச் செல்ல முடியாததால் ஆம்புலன்ஸ் மூலம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம், கேரள போலீஸார் முடிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்துதான் அக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றும் உணர்ச்சிகரமான போராட்டம் தொடங்கியது.

கைக்கோத்த கேரள போலீஸார்

ஆம்புலன்ஸ் சாலையில் செல்லும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கேரள போலீஸார் திட்டமிட்டனர். இதற்காக கண்ணூர் மாவட்டத்தின் தலைமை போலீஸ் அதிகாரி, தமீமின் முழுப் பயணத்தை ஒருங்கிணைப்பதற்காக சிறப்புக் குழு ஒன்றை நியமித்தார்.

தமீமின் ஆம்புலன்ஸ் இரவு 8.23 மணியளவில் போதிய பிராணவாயு சிலிண்டர்களை நிரப்பிக் கொண்டு புறப்பட்டது.

இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வேகமாக பரவ, மக்கள் ஆங்காங்கே சாலைகளில் தமீமின் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு ஓரமாக தங்களது வாகனங்களை நிறுத்தினர்.

காவல் துறையினர் மாவட்ட எல்லைகளில் போக்குவரத்தை மாற்றியமைத்து தமீமுக்கு ஆம்புலன்ஸின் வேகம் குறையாமல் பார்த்து கொண்டனர்.

ஆம்புலன்ஸ் செல்வதற்காக சாலையில் போக்குவரத்து  நெரிசலை சரிசெய்த போலீஸார்.

இறுதியில், அதிகாலை 3.23 மணியளவில் தமீமின் ஆம்புலன்ஸ் திருவனத்துபுர மருத்துவமனைக்கு வந்தடைந்தது. குழந்தைக்காக காத்திருந்த மருத்துவர்களும், உதவியாளர்களும் விரைந்து வந்து குழந்தைக்கு அறுவை சிகிச்சையை தொடங்கினர்.

இந்தப் பயணம் குறித்து தமீமின் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “இந்தப் பயணம் போலீஸ் அதிகாரிகளின் உதவி இல்லாவிட்டால் நிச்சயம் வெற்றி அடைந்திருக்காது. நான் தொடர்ந்து 100 -120 கிலோமீட்டர் வேகத்தில் எனது ஆம்புலன்ஸை செலுத்தி கொண்டிருந்தேன் இதற்காக சாலையை ஒருங்கமைத்த சிறப்பு குழுவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள குழந்தை பாத்திமாவின் உடல் நிலை தற்போதுவரை ஆபத்தான கட்டத்தில்தான் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தனை பேர் ஒத்துழைப்புடன் அறுவை சிகிச்சை நடந்துள்ள நிலையில், குழந்தை பாத்திமா பத்திரமாக மீண்டு வரவேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாகவும் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x