Last Updated : 26 Nov, 2017 10:24 AM

 

Published : 26 Nov 2017 10:24 AM
Last Updated : 26 Nov 2017 10:24 AM

உரிய நீதிமன்ற ஆணை இல்லாமல் சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது: வருமான வரித் துறைக்கு பெங்களூரு சிறை அதிகாரி கடிதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த பிப்ரவரி 16-ம் தேதி பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர். ஜெயா டிவி அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் 5 நாட்களாக தொடர்ந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின.

இதனிடையே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் கடந்த வாரம் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் சொத்து தொடர்பான ஆவணங்கள், பென் டிரைவ் உள்ளிட்டவை சிக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக சசிகலாவின் உறவினர்கள் விவேக், கிருஷ்ண ப்ரியா, ஷகிலா உள்ளிட்டோரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளின் பெரும்பாலான கேள்விகளுக்கு விவேக், கிருஷ்ண ப்ரியா உள்ளிட்டோர் உரிய பதில் அளிக்கவில்லை. “ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ், நமது எம்ஜிஆர் உள்ளிட்ட நிறுவனங்களில் 2015-ம் ஆண்டுக்கு பிறகே நாங்கள் நிர்வாகியாக பொறுப்பேற்றோம். அதற்கு முன்பு என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியாது” என பதில் அளித்துள்ளனர்.

எனவே 2015-ம் ஆண்டுக்கு முன்பு அந்த நிறுவனங்களை நிர்வகித்த சசிகலா, இளவரசி ஆகியோரை விசாரிக்க வருமான வரித் துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர். இதையடுத்து சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி பெங்களூரு மத்திய சிறை கண்காணிப்பாளர் சோமசேகருக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பினர்.

இதைப் பரிசீலித்த சிறை கண்காணிப்பாளர் சோமசேகர், சென்னையில் உள்ள வருமான வரித்துறை மண்டல இயக்குநருக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “சசிகலாவும், இளவரசியும் குற்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, கைதிகளிடம் விசாரணை நடத்த நீதிமன்ற அனுமதி வேண்டும். இல்லாவிட்டால் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது. கர்நாடக சிறைத்துறை விதிகளின்படி, நீதிமன்ற ஆணை இருந்தால் மட்டுமே வருமான வரித்த துறையின் விசாரணைக்கேற்ற நாள், இடம் ஆகியவற்றை ஒதுக்கி தர முடியும். அரசுத் துறை ரீதியான கடிதம் மட்டுமே அதற்கு போதுமானது அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சசிகலாவிடம் விசாரிக்க அனுமதி கோரி, பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இதன் விசாரணை நடத்துவதில் காலதாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x