Published : 20 Nov 2017 05:45 PM
Last Updated : 20 Nov 2017 05:45 PM

பத்மாவதி சர்ச்சை: பிரகாஷ்ராஜ் விமர்சனம்

'பத்மாவதி' திரைப்பட இயக்கு நர், நடிகையின் தலைக்கு பணம் அறிவித்துள்ளது பணமதிப்பிழப்புக்கு பிறகு நிறைய பணம் பரிசாக அளிக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் வரலாறும், வரலாற்றுக் குறிப்புகளும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ராணி பத்மாவதிக்கும், அலாவுதீன் கில்ஜிக்கும் கனவுப் பாடல் இருப்பதாக வதந்தி உருவானது. இதை இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி முற்றிலுமாக மறுத்தார். ராணி பத்மாவதிக்கும் அலாவுதீன் கில்ஜிக்கும் இடையே எந்த விதமான காட்சியும் இல்லை என்று தொடர்ந்து கூறிவந்தார்.

ஆனால் தொடர்ந்து பத்மாவதி திரைப்படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கும், நடிகர்களுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கடந்த வாரம் காஷ்டிரிய சமூகத்தினர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் தீபிகா படுகோன் தலைக்கு ரூ 5 கோடி அறிவித்தது.

இந்நிலையில், ஹரியாணா மாநிலம் பாஜக தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுரஜ் பால் அமு கூட்டம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை பேசும்போது, சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் தீபிகா தலைக்கு 10 கோடி அறிவித்தார்.

சுரஜ் பால் அமுவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டர் பக்கத்தில், "ஒருவர் தீபிகா, சஞ்சய்லீலா பன்சாலி தலைக்கு 5 கோடி பரிசு தொகையாக அறிவிக்கிறார். மற்றொரு பாஜக ஊடக ஒருங்கிணைப்பாளர் அதனை செய்து முடிப்பவருக்கு 10 கோடி அறிவிக்கிறார்.

இவற்றை எல்லாம் பார்க்கும் போது பணமதிப்பிழப்புக்கு பிறகு நிறைய பணம் பரிசாக அளிக்கப்பட்டுள்ளதைக்  காட்டுகிறது. ஆனால் இவை எல்லாம் ஜிஎஸ்டிக்குள் அடங்காது” என்று பதிவிட்டுள்ளார்.

‘பத்மாவதி’ படத்துக்கு எதிர்ப்புகள் தொடர்ந்து அதிகாரித்து வருவதால், டிசம்பர் 1-ம் தேதி வெளியாக இருந்த 'பத்மாவதி' திரைப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x