

நலிவுற்று மரணப் படுக்கையில் கிடக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிர் தருவதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட் விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
இது பற்றி அவர் கூறியதாவது: சிக்கலில் மாட்டியுள்ள நாட்டை வெளியில் கொண்டு வரும் அரசின் முயற்சிக்கு ஏற்ப பட்ஜெட் அமைந்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகள், விருப்பங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையை பட்ஜெட் ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் நலிவுற்றுக்கிடப்போருக்கும் ஏழைகளுக்கும் புதிய நம்பிக்கை கீற்றாக பட்ஜெட் திகழ்கிறது.
நாட்டுக்கு சோதனை காலம் நிலவினாலும் ஏழைகளுக்கும் புதிதாக உருவாகியுள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கும் முடிந்த உதவிகளை செய்ய ‘கூட்டு முயற்சி முழுமையான வளர்ச்சி’ என்பதை தாரக மந்திரமாக கொண்டு அரசு செயலாற்றும்.
இந்தியா முன்னேற்றம் அடைய அத்தனை வாய்ப்பு களையும் அரசு கையாளும். இந்தியாவை பீடித்துள்ள சவால்களை விரட்டி அடிப்போம்.
125 கோடி மக்களின் சக்தியைக் கொண்டு இந்தியாவை சிக்கலிலிருந்து நம்மால் மீட்டெடுக்க முடியும். நாட்டை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல மக்கள் சக்தி பயன்படுத்தப்படும். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.