

வடக்கு கோவாவில் அமைந்துள்ள மங்கேஷி கோயிலில் நடக்க முடியாத சிறுமிக்கு சக்கர நாற்காலியுடன் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்கோயிலின் அறங்காவலரே அனுமதி அளிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுபற்றிப் பேசிய சிறுமியின் தந்தை சுபதா கேஸ்கர், ''கோயில் அறங்காவலர் அனில் கென்க்ரே என்னுடைய மகள் சானிகா கேஸ்கருக்கு அனுமதி மறுத்தார். மாற்றுத்திறனாளியான எனது மகள் சக்கர நாற்காலியுடன் மங்கேஷி கோயிலுக்குள் நுழைய முயன்றாள். ஆனால் சக்கர நாற்காலியும் ஒரு வாகனமாகக் கருதப்பட்டு, அவளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது'' என்றார்.
கோவா மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சங்கம், கென்க்ரே மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள கென்க்ரே, ''அவர்கள் என்னை என்ன கேட்டார்கள் என்பது என் நினைவில் இல்லை. ஆனால் நிச்சயம் கோயிலுக்குச் சென்று வணங்க யாருக்கும் நாங்கள் அனுமதி மறுக்கவில்லை என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். சக்கர நாற்காலியைக் கோயிலின் உள்ளே எடுத்துச் செல்லும் வசதி இல்லை என்றே நான் தெரிவித்தேன். அதை அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டனர் ''என்று தெரிவித்துள்ளார்.
கோவா மாநில மாற்றுத்திறனுக்கான ஆணையர் அனுராதா ஜோஷி , செவ்வாய்க்கிழமை அன்று கோயிலுக்கு நேரில் சென்று விசாரணையைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்தார்.