பூமி, நிலவை துல்லியமாக படம் பிடித்த சந்திரயான்-3: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

இஸ்ரோ வெளியிட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் எடுத்த பூமி மற்றும் நிலவின் படங்கள்.
இஸ்ரோ வெளியிட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் எடுத்த பூமி மற்றும் நிலவின் படங்கள்.
Updated on
1 min read

சென்னை: சந்திரயான்-3 விண்கலம் எடுத்த பூமி மற்றும் நிலவின் 2 புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்த சந்திரயான்-3 விண்கலம், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னர், ஆக.5-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 நுழைந்தது.

நிலவு வட்ட சுற்றுப்பாதையில்...: தற்போது சுற்றுப்பாதை உயரத்தை சுருக்கி, நிலவில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது குறைந்தபட்சம் 174 கி.மீ.தூரமும், அதிகபட்சம் 1,437 கி.மீ.தூரமும் கொண்ட நிலவு வட்டசுற்றுப்பாதையில் சந்திரயான் விண்கலம் வலம்வருகிறது. இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலம் எடுத்த பூமி மற்றும் நிலவின் 2 புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

அதாவது, நிலவில் தரையிறங்கக்கூடிய லேண்டரில் உள்ள எல்எச்விசி எனும் கிடைமட்ட கேமரா மூலம் நிலவின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படங்கள் துல்லியமாக இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகத்துடன் கூறினர்.

அதில் 120 கி.மீ. விட்டம் கொண்ட பிதாகரஸ் பள்ளம், எரிமலைகளால் ஏற்பட்ட ஓசியானஸ் புரோசெல்லாரம், அரிஸ்டார்கஸ் பள்ளம், ராமன் பள்ளத்தாக்கு என நிலவின் மேற்பரப்பை தெளிவாக காணமுடிகிறது.

இந்த படம் ஆக.6-ம் தேதி நிலவில் இருந்து 18,000 முதல் 10,000 கி.மீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, இஸ்ரோ வெளியிட்ட பூமியின்படம், லேண்டரின் முன்பகுதியில் உள்ள இமேஜிங் கேமரா மூலம்ஜூலை 14-ம் தேதி எடுக்கப்பட்டதாகும். அடுத்தகட்டமாக சந்திரயான் சுற்றுப்பாதை உயரம் படிப்படியாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. திட்டமிட்டபடி ஆக.23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் மெதுவாக விண்கலம் தரையிறக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in