Published : 10 Nov 2017 11:51 AM
Last Updated : 10 Nov 2017 11:51 AM

அச்சுறுத்தும் காற்று மாசுக்கு யார் காரணம்? - டெல்லி, ஹரியாணா, பஞ்சாப் பரஸ்பர குற்றச்சாட்டு

டெல்லியில் காற்று மாசு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுதொடர்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியாணா மாநிலங்கள் பரஸ்பரம் மாறி மாறி புகார் தெரிவித்துள்ளன.

டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் காற்று மாசு காணப்படுகிறது. காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) 474 என்ற அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக டெல்லியில் 200 மீட்டருக்கு அப்பால் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புகை போன்று காற்று மாசு சூழ்ந்துள்ளதால் மக்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காற்று மாசு பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் முகமூடிகளை அணிந்துள்ளனர். பள்ளிகளுக்கு நவம்பர் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாததால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்துகள் நடந்து வருகின்றன. டெல்லி - ஆக்ரா யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது.

டெல்லி மட்டுமின்றி பஞ்சாப், ஹரியாணா, வடக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காற்று மாசை குறைப்பதற்காக நவம்பர் 13 முதல் 17ம் தேதி வரை ஐந்து நாட்கள் கார்களுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஒன்றை இலக்க தேதிகளில் ஒன்றை இலக்க எண் கொண்ட கார்கள் அனுமதிக்கப்படும். இரட்டை இலக்க தேதிகளில் இரட்டை இலக்க எண் கொண்ட கார்கள் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காற்று மாசுக்கு யார் காரணம் என்ற விவாதம் டெல்லி, பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களிடையே எழுந்துள்ளது. இதுதொடர்பாக அம்மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பஞ்சாப், ஹரியாணாவை குற்றஞ்சாட்டிய கேஜ்ரிவால்..

டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறுகையில் ‘‘டெல்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் விவசாயிகள் சாகுபடிக்கு பின் பயிர்களின் காய்ந்த சறுகுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது. ஆண்டுதோறும் இந்த பிரச்னையை டெல்லி சந்தித்து வருகிறது. இதுதொடர்பாக இரு மாநில முதல்வர்களுக்கும் நான் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளேன். தலைநகர் மண்டல பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இணைந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.’’ எனக்கூறினார்.

டெல்லிக்கு பதிலடி கொடுத்த அம்ரீந்தர் சிங்..

இதற்கு பதிலளித்துள்ள பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறுகையில் ‘‘நிலத்தை வளமாக்க வேண்டும் என்பதால் தான் பயிர்களின் சறுகுகளை விவசாயிகள் எரிக்கின்றனர். அதை நிறுத்த வேண்டும் என்றால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசு தான் இதற்கு நிதியுதவி அளிக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத உள்ளேன்’’ எனக் கூறியுள்ளார்.

ஹரியாணாவும் விட்டுவைக்கவில்லை..

இதற்கு பதிலடியாக ஹரியாணா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் கூறுகையில் ‘‘ஹரியாணா மாநிலத்தில் உற்பத்தி செய்யும் விவசாயப் பொருட்களால் டெல்லி மக்களே பயன்பெறுகின்றனர். எனவே விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டிய கடமையும் டெல்லி அரசுக்கு உண்டு. விவசாயிகளுக்கு இழப்பீடு தர வேண்டியது டெல்லி அரசே’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x