

டெல்லி போலீஸில் வரும் ஆண்டில் 30,000 பெண்களைச் சேர்க்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டில் வெளியாகும் எனத் தெரிகிறது.
நாடு முழுவதும் காவல் துறையில் அதிக பெண்களை பணி அமர்த்துவது, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக உள்ளது. முதல்கட்டமாக தலைநகர் டெல்லியில் உள்ள சுமார் 200 போலீஸ் நிலையங்களில் கான்ஸ்டபிள், அதிகாரிகள் பதவிகளில் கூடுதலாக பெண்களை பணியமர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இது பற்றி தி இந்துவிடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியபோது, ‘டெல்லியில் டிசம்பர் 16, 2012-ல் நடந்த பலாத்கார சம்பவத்துக்கு பிறகு கடந்த ஆட்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஜே.எஸ்.வர்மா கமிட்டி மற்றும் நீதிபதி உஷா மெஹரா கமிஷன் ஆகியோரின் பரிந்துரையும் இதற்கு முக்கிய காரணம். கூடுதல் பெண்களை காவல் துறையில் பணியமர்த்தும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்’ எனக் கூறுகின்றனர்.
டெல்லி போலீஸில் தற்போது 82,000 பேர் பணியாற்றுகின்றனர். இதில் 7,000 பேர் பெண்கள் ஆவர். டெல்லியில் அதிகமாக நடைபெறும் பெண்கள் மீதான குற்றங்களைத் தடுக்க பெண் போலீஸார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என நீதிபதிகள் பரிந்துரைத்திருந்தனர். இதன்படி டெல்லி காவல் துறையில் கூடுதலாக 30000 பெண்களை சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருபகுதி பெண் போலீஸாருக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், என்.ஜி.ஓக்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு சிறப்புக் குழுவை உருவாக்கவும் அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.