நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி முதல் புதிய மசோதா சர்ச்சை வரை | செய்தி தெறிப்புகள் 10 @ ஆக.10, 2023

நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி முதல் புதிய மசோதா சர்ச்சை வரை | செய்தி தெறிப்புகள் 10 @ ஆக.10, 2023
Updated on
3 min read

மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, 2 மணி நேரத்துக்கும் மேலாக, மக்களவையில் பதிலுரை நிகழ்த்திய பிரதமர் மோடி, “வரும் காலத்தில் மணிப்பூரில் அமைதி திரும்பும்; மணிப்பூர் மக்களோடு நாடு இருக்கிறது” என்று மக்களவையில் பிரதமர் மோடி உறுதியளித்தார். மேலும், எதிர்க்கட்சிகளுக்கு ஏழைகளின் பசி குறித்து கவலை இல்லை என்றும், அதிகாரப் பசிதான் அவர்களின் மனதில் உள்ளது என்றும் அவர் சாடினார்.

சிலப்பதிகாரம் குறிப்பிடுவது ‘திராவிடர்கள்’ அல்ல: நிர்மலா சீதாராமன்: மக்களவையில் வியாழக்கிழமை நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “சிலப்பதிகார வழியில் பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார். சிலப்பதிகாரம் தமிழர்கள் என்றுதான் சொல்கிறது. அதில் திராவிடர்கள் என சொல்லப்படவில்லை” என்றார்.

மேலும், “பெண்களின் பாதுகாப்பு குறித்து திமுக பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சட்டப்பேரவையில் அவரது சேலையை இழுத்த கட்சி திமுக. மீண்டும் இந்த அவைக்கு முதல்வராகத்தான் வருவேன் என்று அப்போது ஜெயலலிதா சபதம் செய்து, அதன்படியே 2 ஆண்டுகள் கழித்து முதல்வராக அவைக்கு வந்தார். ஆனால், நீங்கள் கவுரவ சபை குறித்தும், திரவுபதி குறித்தும் பேசுகிறீர்கள். ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது மறந்துவிட்டதா?” என்று திமுக எம்பி கனிமொழிக்கு பதிலடி தரும் வகையில் மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

தேர்தல் ஆணைய நியமனங்களுக்கான புதிய மசோதா: காங். எதிர்ப்பு: தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் பெயர்களை பரிந்துரைக்கும் மூவர் குழுவில் இருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கும் மத்திய அரசின் புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், "தேர்தல் ஆணையத்தை பிரதமரின் கைப்பாவையாக மாற்றும் அப்பட்டமான முயற்சி இது. பாரபட்சமற்ற குழு தேவை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இனி என்னாகும்? ஒரு சார்புடைய தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று பிரதமர் ஏன் நினைக்கிறார்? இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான, தன்னிச்சையான, நியாயமற்ற மசோதா. மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டிலும் இதை நாங்கள் எதிர்ப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

எது வெட்கக்கேடானது? - அமித் ஷாவுக்கு ப.சிதம்பரம் பதிலடி: மணிப்பூர் கலவரம் வெடித்து 100 நாட்கள் கடந்த பின்னரும்கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு செல்ல நேரம் கிடைக்காதது வருந்தத்தக்கது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது உரையாற்றிய அமைச்சர் அமித் ஷா, “மணிப்பூர் வன்முறை கவலையளிக்கிறது. ஆனால், அதன் மீது நடைபெறும் அரசியல் வெட்கக் கேடானது என்று பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ப.சிதம்பரம் ட்விட்டரில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திமுகவினரின் குரலைக் கேட்டாலே பாஜக அரசு நடுங்குகிறது: ஸ்டாலின்: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுகவினரின் குரலைக் கேட்டால், பாஜக அரசு நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது. தலைவர் கருணாநிதியின் வார்ப்புகள் அப்படி" என்று திமுக தொண்டர்களுக்கு, அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை மோசம்: ஐகோர்ட் அதிருப்தி: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், வேலூர் நீதிமன்றத்தில் மிக மோசமான முறையில் விசாரணை நடந்துள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

முன்னதாக, விழுப்புரத்தில் இருந்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி வசந்த லீலா பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை.

இந்த நிலையில், குற்ற விசாரணை சட்டம் 391-வது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகளை ஆய்வு செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்தார்.

இதுவரை நான் பார்த்ததில், மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்டதால்தான் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும், இந்த மனு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் சிறுமியை மாடு முட்டிய பயங்கரம்: சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ பகுதியில், புதன்கிழமையன்று மாலை சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசு மாடு, அவ்வழியே சென்ற பள்ளிக் குழந்தையை முட்டித் தூக்கி வீசியதில் அந்தக் குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து, சாலைகளில் கட்டுப்பாடின்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், “இந்த சம்பவத்தைப் பொருத்தவரை சிறுமியை முட்டித்தள்ளிய மாட்டைக் கைப்பற்றியுள்ளோம். மாடு கண்காணிப்பில் இருக்கிறது. ஒருவேளை அதற்கு வெறிநோய் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்று கண்காணித்து வருகிறோம். மாட்டின் உரிமையாளரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடு வளர்ப்போர் நலச் சங்கம் மாட்டு உரிமையாளருக்கு ஆதரவாக வந்தாலும்கூட இந்தச் சம்பவத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் வலுவாக எடுக்கப்படும்" என்றார்.

இதனிடையே, பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நீர், நிலம் மாசுபாடு: என்எல்சி பதிலளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு: கடலூர் மாவட்ட சூழலியல் குறித்து பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரித்த தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம், NLC நிர்வாகம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நேற்று முன்தினம் “மின்சாரத்தின் இருண்ட முகம்” என்கிற ஆய்வறிக்கையை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையத்தால் அதனை சுற்றியுள்ள 8 கி.மீ பரப்பளவுக்கு உள்ள கிராமங்களில் நீர், நிலம் மாசுபட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

“நிச்சயம் நான் இருப்பேன்”-ரசிகருக்கு தினேஷ் கார்த்திக் பதில்: எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர் ஒருவர் யார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் என வாக்கெடுப்பு நடத்தினார். அதில் ரசிகர் ஒருவர் தினேஷ் கார்த்திக்கை டேக் செய்தார். அதற்கு “நிச்சயம் உலகக் கோப்பை தொடரில் நான் இருப்பேன். அது மட்டும்தான் என்னால் சொல்ல முடியும்” என தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார்.

ஹவாய் காட்டுத் தீயால் உருக்குலைந்த நகரம் - 6 பேர் உயிரிழப்பு: அமெரிக்க நாட்டின் தீவு மாகாணமான ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயினால் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ள சூழலில், சுமார் 271 கட்டிட அமைப்புகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மவுயி நகருக்கு அருகில் அமைந்துள்ள காடுகளில் ஏற்பட்ட தீ நகருக்குள் பரவியது. புதன்கிழமை அன்று டோரா சூறாவளி ஹவாய் தீவை கடந்தது. அதனால் ஏற்பட்ட சூறாவளி காற்றால் தீயின் பரவல் வேகமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் ரிலீஸ்: ரசிகர்கள் கொண்டாட்டம்: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியான திரையரங்குகளின் வெளியே வைக்கப்பட்டிருந்த ரஜினிகாந்தின் போஸ்டர் மற்றும் பேனர்களுக்கு அவரது ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். மேலும் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in