மல்லிகார்ஜுன கார்கே | கோப்புப் படம்
மல்லிகார்ஜுன கார்கே | கோப்புப் படம்

“பிரதமர் மோடி ஒன்றும் கடவுள் இல்லையே?” - மாநிலங்களவையில் கார்கே காட்டம்

Published on

புதுடெல்லி: "பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு ஏன் தயங்குகிறார். இந்தப் பிரச்சினையில் அவர் இங்கு வருவதில் இத்தனை நாட்கள் என்ன சிக்கல் இருந்தது? அவர் பிரதமர் தானே? அவர் ஒன்றும் கடவுள் இல்லையே" என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார்.

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. கடந்த 8-ஆம் தேதி முதல் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது. நேற்று ராகுல் காந்தி பேச, அதற்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஸ்மிருதி இரானி எதிர்வினையாற்ற, அவையில் அனல் பறந்தது. இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலுரை ஆற்றவிருக்கிறார். பிரதமரின் உரை பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் மவுன விரதத்தை கலைக்கவே இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவந்ததாக எதிர்க்கட்சிகள் கூறிய நிலையில், காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளுமே பிரதமரின் பதிலுரையை எதிர்நோக்கியுள்ளன.

கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை ஆகஸ்ட் 11 உடன் நிறைவு பெறுகிறது. இந்தச் சூழலில் இன்று பிரதமர் ஆற்றவுள்ள பதிலுரை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதற்கிடையில், இன்று மக்களவை கூடியவுடனேயே எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பின. 'மணிப்பூர் இந்தியாவுடன் இருக்கிறது' என்ற பதாகைகள் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, மாநிலங்களவையில் உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, "அவைக்கு வராமல் இருக்க மோடி என்ன கடவுளா? பிரதமர் தானே!” என்ற காத்திரமாகக் கேள்வி எழுப்பினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in