

புதுடெல்லி: வடகிழக்கு மாநில இளைஞர்களின் திறன் வளர்ச்சித் திட்டத்துக்காக ரூ.360 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. இந்தக் குறையைப் போக்க அந்தமாநில இளைஞர்களின் திறன்களை வளர்ப்பதற்காக புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
2.5 லட்சம் வடகிழக்கு மாநில இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும். நேற்று முன்தினம் இந்தத் திட்டத்தை மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜி. கிஷண் ரெட்டி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
மத்திய அரசின் பிரதமர் கவுஷல் விகாஸ் யோஜனா (பிஎம்கேவிஒய்), தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (என்ஏபிஎஸ்), ஜன் சிக்சான் சன்ஸ்தான்ஸ் (ஜேஎஸ்எஸ்) திட்டங்கள் மூலம் 2.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு சார்ந்த பயிற்சிகளை மத்திய அரசு சார்பில் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.360 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.